க.பொ.த. சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மீள்பரிசீலனை முடிவுகள் இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும்

15 0

கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மீள்பரிசீலனை முடிவுகள் இரு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) காமினி வலேபொட எம்.பி  எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

வலேபொட எம்.பி தனது கேள்வியின்போது,

கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய ஒரு லட்சத்து 80 ஆயிரம் மாணவர்கள் பரீட்சை பெறுபேறுகள் மீதான மீள்பரிசீலனை முடிவுகளை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். க.பொ.த. உயர்தரத்துக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள நிலையில் அந்த மாணவர்கள் இதன் மூலம் பெரும் அசௌரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த விடயத்தில் கல்வி அமைச்சர் உரிய கவனம் செலுத்தி மீள்பரிசீலனை முடிவுகளை விரைவாக வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதற்கு தொடர்ந்து அமைச்சர் பதிலளிக்கையில்,

வழமையாக உள்ளதை விட இம்முறை கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை விடைத்தாள் மீள்பரிசீலனைக்காக இரண்டு மடங்கு பரீட்சை விடைத்தாள் தொகை கிடைத்துள்ள நிலையில் அதற்கான நடவடிக்கைகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளது. அடுத்த மாத முற்பகுதியில் அதனை வெளியிட முடியும்.

எவ்வாறாயினும் இம்முறை கல்விப் பொது தராதர சாதாரண பரீட்சை எதிர்வரும் மே மாதம் இரண்டாவது வாரத்தில் ஆரம்பமாகவுள்ள நிலையில் அதற்கு முன்பதாக இந்த மீள்பரிசீலனை முடிவுகள் வெளியிடப்படும்.  அது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் எனக்கு அறிவித்துள்ளார் என்றார்.