இரு தரப்பு பொது இணக்கப்பாட்டுடன் குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதா ?

13 0

பாதுகாப்பு தரப்பினதும், தாக்குதல்தாரிகளினதும் பொது இணக்கப்பாட்டுடன் குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதா என்ற நியாயமான சந்தேகம் எழுகிறது.

முஸ்லிம்களுக்கு எதிராக ராஜபக்ஷர்கள் முன்னெடுக்க அரசியல் பிரசாரங்களின் உச்சக்கட்டமாகவே உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

மக்களாணை இல்லாத இந்த அரசாங்கம் ஒருபோதும் உண்மையை பகிரங்கப்படுத்தாது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் விவாதிக்கப்படுகிறது. தாக்குதல் நடத்தப்பட்ட காலப்பகுதியில் தொடர்ச்சியாக 09 நாட்கள் விவாதிக்கப்பட்டது.

இருப்பினும் இன்று வரை நீதி கிடைக்கவில்லை. ஐந்தாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் செனல் 04 ஆவணப்படம் வெளியாகியுள்ளது.

பிள்ளையான் புத்தகம் வெளியிட்டுள்ளார். பிரதான சூத்திரதாரியை நாங்கள் அறிவோம் என்று  ஒரு தரப்பினர் குறிப்பிடுவதையும் அறிய முடிகிறது.

குண்டுத்தாக்குதலில் பின்னணியில் அரசியல் இல்லை என்று குறிப்பிட முடியாது. குண்டுத்தாக்குதலை தோளில் சுமந்து சென்றவர்களை முறையாக விசாரணை செய்தால் உண்மையை கண்டு பிடிக்கலாம்.

2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் ராஜபக்ஷர்களின் அரசியல் செயற்பாடுகள்   முஸ்லிம் அடிப்படைவாதம்,இஸ்லாமிய அடிப்படைவாதம்,சிங்கள இனத்துக்கு அச்சுறுத்தல் என்பதை மையப்படுத்தியிருந்தது.உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் இதன் உச்சகட்டம்.

குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டதன் பின்னரே 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பெறுபேறு எழுதப்பட்டது. குண்டுத்தாக்குதலுக்கு அப்போதைய அரசாங்கத்தின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் பொறுப்பேற்க வேண்டும்.

இந்த தாக்குதலுக்கு இரு தரப்பினர் பொறுப்பேற்க வேண்டும். குண்டுத்தாக்குதல் குறித்து தகவல் அறிந்திருந்தும் அதனை தடுக்காத தரப்பினர், தாக்குதல்தாரிகள் ஆகியோர் இவ்விரு தரப்பினராவர். தகவல்  அறிந்திருந்தும் பாதுகாப்பு தரப்பினர்  தாக்குதலை தடுக்கவில்லை. ஆகவே பாதுகாப்பு தரப்பினரின் ஒத்துழைப்புடன் தாக்குதல்தாரிகள் தாக்குதலை நடத்தினார்களா என்ற சாதாரண சந்தேகம் எழுகிறது.

குண்டுத்தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னர் வவுணத்தீவு பகுதியில்  இரு பொலிஸ் அதிகாரிகள் பயங்கரவாதி சஹ்ரானின்  தரப்பினரால் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்த படுகொலை தொடர்பான விசாரணைகள் திரிபுபடுத்தப்பட்ட நிலையில் முன்னெடுக்கப்பட்டது. தாஜ் சமுத்திரா ஹோட்டலுக்கு தாக்குதலை நடத்த சென்ற ஜமீல் அங்கு தாக்குதலை நடத்தாமல் தெஹிவளை பகுதிக்கு சென்றுள்ளார்.ஜமீல் குண்டை வெடிக்கச் செய்வதற்கு முன்னரே  அவரது வீட்டுக்கு பொலிஸார் சென்றுள்ளனர்.

மாத்தளை பொடி சஹ்ரானை தொடர்பு கொண்டு புலனாய்வு அதிகாரி ஒருவர் இந்த தாக்குதலை  ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்குமாறு  அழுத்தம் பிரயோகித்துள்ளார்.ஆகவே பாதுகாப்பு தரப்பிற்கும்,தாக்குதல்தாரிகளுக்கும் இடையிலான பொது இணக்கப்பாட்டுடனே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. மறுபுறம் சாரா ஜஸ்மீன் உயிருடன் உள்ளாரா,இல்லையா  என்பது சந்தேகத்துக்குரியது. ஆகவே தாக்குத்தாரிகளுக்கும், பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையில் தொடர்பு உள்ளதா என்ற சிக்கலுக்கு தீர்வு காணாமல் உண்மையை கண்டறிய முடியாது.

உண்மையை கண்டறிவது பிரச்சினைக்குரியதாகவே உள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவும், அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் மக்களால் விரட்டியடிக்கப்பட்டார். இவர்களின் சகாவான ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பின் பிரிவுகளுக்கு அமைய மக்களாணையில்லாமல் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். உண்மையை கண்டறிய வேண்டுமாயின் மக்களாணையுடனான அரசாங்கம் தோற்றம் பெற வேண்டும்.

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மீது தற்போது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்ட போது முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக வன்முறையை தூண்டி விடும் செயற்பாடுகள் ஒரு தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டது. நீர்கொழும்பு, புத்தளம், மினுவாங்கொட ஆகிய பகுதிகளில் திட்டமிட்ட வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இவ்வாறான நிலையில் பேராயர் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தினார். அவர் மாத்திரம் தலையிடாமல் இருந்திருந்தால்  நாட்டில் இரத்தம் வெள்ளம் ஓடியிருக்கும்.

கோட்டபய ராஜபக்ஷ மீது மக்கள் நம்பிக்கை இழந்ததால் அரகலய தோற்றம் பெற்றது. மக்கள் அவரை விரட்டியடித்தார்கள். கோட்டா தன்னை ஏமாற்றினார் என்று பேராயர் குறிப்பிட்டதன் பின்னர் அவருக்கு எதிராக ஆளும் தரப்பினர் பேசுகிறார்கள். 2019ஆம் ஆண்டு  காலப்பகுதியை மறந்து விடக் கூடாது என்றார்.