உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களின் சாபத்தினால் ராஜபக்ஷர்கள் பதவி விலகினார்கள்

14 0

உயிர்த்த ஞாயிறுதின குண்டுத்தாக்குதல்களின் சாபத்தினால் தான்  பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகினார்கள். கடவுளின் நீதிமன்றத்தில் இருந்து எவரும் தப்பிக்க முடியாது.

பொறுப்புக் கூற வேண்டியவர்கள் தண்டனைக்கு தயாராக வேண்டும். குண்டுத்தாக்குதலை நடத்த புலனாய்வு பிரிவினரே இடமளித்தார்கள். உண்மை நிச்சயம் வெளிவரும் என எதிர்க்கட்சிகளின் பிரதான கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25)  இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும்  உரையாற்றியதாவது,

உயிர்த்த ஞாயிறு குண்டு தின குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டு விடயத்தை சபையில் பதிவு செய்ய விரும்புகிறேன். ‘ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கை கிடைத்தவுடன் அப்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ  தொலைபேசி அழைப்பை எடுத்து, அறிக்கையின் பரிந்துரைகளை செயற்படுத்துவது கடினம் ஏனெனில் பரிந்துரைகளை செயற்படுத்தும் போது எனக்கு நெருக்கமானவர்களை கைது செய்யவும், அவர்களின் அமைப்புக்களை தடை செய்ய நேரிடும்’ என்று குறிப்பிட்டதாக பேராயர் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் நியாயத்தை பெற்றுக்கொள்ள  சர்வதேசத்தை நாடுவதாக பேராயர் குறிப்பிட்டுள்ளார்.இலங்கை விவகாரத்தை சர்வதேசத்துக்கு கொண்டு  செல்வதால் நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படும்.யுத்த விவகாரம் ஜெனிவாவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இது முடிவடைந்து விட்டது என்று எண்ண வேண்டாம்.நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும்.

பொருளாதார படுகொலையாளிகள்,பொருளாதார குற்றம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு  வருடாந்த கூட்டத்தொடரில் குறிப்பிட்டது.இதனை தொடர்ந்து பொருளாதார படுகொலையாளிகளின் பெயரை  எமது உயர்நீதிமன்றம் பகிரங்கப்படுத்தியது.ஆகவே சர்வதேச விசாரணைகளை அலட்சியப்படுத்த முடியாது.

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை முழுமையாக சர்வதேசத்துக்கு பொறுப்பாக்க விரும்பவில்லை.உள்ளக மட்டத்தில் விசாரணைகளை மேற்கொண்டு நியாயத்தை நிலை நாட்டுங்கள் என்றே சர்வதேசம் குறிப்பிடுகிறது.

இவ்விடயத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சிறந்த திட்ட யோசனைகளை கத்தோலிக்க சபைக்கு முன்வைத்துள்ளார். எமது அரசாங்கத்தில் சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்படும் அதற்காக விசேட விசாரணை ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படும். அத்துடன் விசாரணை அலுவலகமும்,விசேட நீதிமன்ற கட்டமைப்பும் ஸ்தாபிக்கப்படும்.

எமது அரசாங்கத்திலேயே குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது.அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு தரப்பினர் தனக்கு தகவல்களை வழங்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.அது உண்மையாக இருக்கலாம் ஏனெனில் நிலந்த ஜயவர்தன தனது தொலைபேசியின் தகவல்களை அழித்துள்ளார்.

குண்டுத்தாக்குதல் தொடர்பில் புலனாய்வு பிரிவினர் முன்கூட்டியதாகவே  அறிந்திருந்தார்கள்.ஆனால் அவர்கள் முறையாக செயற்படவில்லை. குண்டுத்தாக்குதல்களை நடத்துவதற்கு புலனாய்வு பிரிவினர் இடமளித்துள்ளார்கள்.

குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டதன் பின்னர் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று குறிப்பிட்டுக் கொண்டு கோட்டபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தார். இவர் எப்.பி.ஐ. புலனாய்வு பிரிவுக்கு கடிதம் எழுதி விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு கோரியுள்ளார். இதற்கு எப்.பி.ஐ.’முழுமையான விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம். பயங்கரவாதி சஹ்ரானுடன் ஒன்றரை வருடகாலமாக தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்த நபர் குறித்தும், ஐ.பி.முகவரி தொடர்பில்  குறிப்பிட்டுள்ளோம்’என தெரிவித்துள்ளது.குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரியான கலீல் பயங்கரவாதியான  சஹ்ரானுடன்  தொடர்புக் கொண்டுள்ளார்.ஆகவே உண்மையை இவரும் அறிவார்.

நாட்டில் உள்ளக மட்டத்தில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாவிடின் சர்வதேசத்தை விமர்சிப்பதை அனைத்து அரசாங்கங்களும்  பழக்கமாக கொண்டுள்ளன. உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில் இந்தியா இருந்ததாக தற்போது குறிப்பிடப்படுகிறது. ஆனால் குண்டுத்தாக்குதல் தொடர்பில் இந்தியாவே ஆரம்பத்தில் இருந்து எச்சரித்தது.குண்டுத்தாக்குதல் பின்னணியில் சர்வதேச சக்திகள் இருந்ததாக விசாரணைகளை மேற்கொண்ட எந்த ஆணைக்குழுவிலும்,குழுவிலும் குறிப்பிடப்படவில்லை.

குண்டுத்தாக்குதல்களின் சாபத்தால் தான் முன்னாள் ஜனாதிபதி,பிரதமர் பதவி விலகினார்.நாட்டை விட்டு தப்பியோடினார்கள். நாடு வங்குரோத்து நிலையடைந்தது. கடவுளின் நீதிமன்றத்தில் இருந்து எவரும் தப்பிக்க முடியாது.பொறுப்புக் கூற வேண்டியவர்கள் தண்டனைக்கு தயாராக வேண்டும் என்றார்.