உயிரச்சுறுத்தல் விடுத்தவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு நியாயத்தை பெற்றுக்கொடுங்கள்

12 0

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக நான் பாராளுமன்றத்தில் கதைப்பதாகவும், அவ்வாறு பேசக்கூடாது என்றும் எனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்தனர்.

இந்த அச்சுறுத்தலானது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கான அச்சுறுத்தலாக அன்றி ஜனநாயக உரிமைகள் மற்றும் பாராளுமன்றத்தில் கருத்து கூறும் உரிமைக்கு எதிரான அச்சுறுத்தலாகவே கருதுகிறேன்.

எனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்தவர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து நீதியை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.வேலுக்குமார் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) இடம்பெற்ற அமர்வின்போது சிறப்புரிமையை பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

2015 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் கண்டி மாவட்ட மக்களால் பாராளுமன்ற உறுப்பினராக  நான் தெரிவு செய்யப்பட்டுள்ளேன். கண்டி மாவட்ட மக்கள் இன பேதமின்றி என்னை ஏற்றுக்கொள்கின்றனர்.

இந்நிலையில் கடந்த 21ஆம் திகதி புசல்லாவை நகரில் பாராளுமன்ற உறுப்பினருக்கான சிறப்புரிமைகளை மீறும் செயலுக்கு நான் முகங்கொடுத்தேன்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதேச சபை வேட்பாளர் ஒருவரின் வீட்டில் கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டிருந்தேன். அப்போது அந்த இடத்தில் இருந்து வெளியேறிச் செல்லுமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரான செல்லமுத்து, அவரின் மகன் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புசல்லாவ  அலுவலகத்தில் குண்டர்கள் குழுவொன்று கூறியது. அவர்கள் எனக்கு அச்சுறுத்தல் விடுத்ததுடன் எனது பாதுகாப்பு பிரிவினருக்கும் அச்சுறுத்தல் விடுத்து என்னை அவ்விடத்தில் இருந்து அகற்றுமாறும் கோரினர்.

இதேவேளை தான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக நான் பாராளுமன்றத்தில் கதைப்பதாகவும், அவ்வாறு தொடரக் கூடாது என்றும் எனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்தனர். இந்த அச்சுறுத்தலானது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கான அச்சுறுத்தலாக அன்றி ஜனநாயக உரிமைகள் மற்றும் பாராளுமன்றத்தில் கருத்து கூறும் உரிமைக்கு எதிரான அச்சுறுத்தலாகவே இதனை பார்க்கின்றேன்.

வன்முறையாளர்களால் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல கொல்லப்பட்ட சம்பவத்தை இவ்விடத்தில் நினைவுபடுத்துகின்றேன். நான் இந்த சம்பவத்தையும் அவ்வாறே பார்க்கின்றேன். இது தொடர்பில் நான் மத்திய மாகாண பொலிஸாருக்கு முறைப்பாட்டை முன்வைத்துள்ளேன். ஆனால், முறையாக நடவடிக்கை எடுக்கப்படுவதாக நான் திருப்தியடையவில்லை.

எனக்கு அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உபதலைவர் செல்லமுத்துவின் மகன் செல்வச்சந்திரன் பெருந்தோட்ட நிறுவனமொன்றில் பணியாற்றுகின்றார். அவருக்காக பெரும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. தோட்ட நிறுவனத்தின் உத்தியோகபூர்வ வீடொன்றிலேயே வசிக்கின்றார். இதனால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸும், பெருந்தோட்ட நிறுவனமும் அவர்கள் தொடர்பில் கதைப்பதால் செய்யும் அச்சுறுத்தலாகவே பார்க்கின்றேன்.

நாங்கள் வன்முறை கலாசாரத்தையும் வன்முறை அரசியலையும் எதிர்க்கின்றோம். கருத்துச் சுதந்திரத்தை மதிக்கின்றோம். என்னிடம் கல்வி கற்ற சமூகம் இருக்கிறது. என்னிடம் அடியாட்கள் இல்லை. கூலிக்கு அரசியல் செய்பவர்கள், அரசியலுக்கு விலைபோகிறவர்கள் இல்லை. என்னை ஜனநாயக வழியில் செயற்பட இடமளியுங்கள். இதேவேளை எனது அடிப்படை உரிமை மற்றும் பாராளுமன்ற சிறப்புரிமைக்கு தடையாக இருந்தவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தி நீதியை பெற்றுத்தருமாறு சபாநாயகரிடம் கோருகின்றேன் என்றார்.