கோட்டாவை நாட்டைவிட்டு விரட்ட சிறுபான்மை மக்கள் திட்டமிடவில்லை

20 0

தன்னை தமிழ், முஸ்லிம் மக்களே விரட்டியடித்தார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளமை முற்றிலும் பொய்யானது. ஆனால் அவர் நாட்டைவிட்டு தப்பிச்சென்றபோது முஸ்லிம் நாடே அவருக்கு தஞ்சம் வழங்கியதை அவர் மறந்துள்ளார் என  ஐக்கிய மக்கள் சக்தி  உறுப்பினர் கபீர் ஹாசீம் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

கோத்தாபய ராஜபக்‌ஷ தான் எழுதிய புத்தகத்தில் முஸ்லிம்கள், தமிழ் மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினத்தவர்களே தன்னை விரட்டியடித்தனர் என்று குறிப்பிட்டுள்ளார். அவர் வரலாற்றை தெரிந்துகொள்ள வேண்டும். சிங்கள மன்னர்கள் காலத்தில் இருந்து முஸ்லிம் மக்கள் மன்னர்களை காட்டிக்கொடுக்கும் வகையில் நடந்துகொண்டதில்லை. இதனை சிறுபான்மை மக்களின் சூழ்ச்சியென்றே கூறுகின்றார். இவை கோத்தாபய தனது பாவத்தை கழுவிக்கொள்வதற்காக கூறும் பொய்யாகும். சிறுபான்மை மக்களால் அவரை விரட்டியடிக்க முடியுமா?

2019 ஜனாதிபதி தேர்தல் மேடையில் நாட்டை தன்னாலேயே மீட்க முடியும் என்றும், சிறுபான்மை மக்களுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு இனவாதத்தை பரப்பியே அவர் ஆட்சிக்கு வந்தார். ஆனால் இறுதியில் அவரின் பாதுகாப்பைகூட அவரால் உறுதிப்படுத்த முடியாமல் போனது.  சிங்கள மக்களின் வயிற்றிலும் அவர் அடித்தார். இதனை தொடர்ந்தே போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. எரிபொருள், எரிவாயு பிரச்சினைகளால் மக்ககள் போராட்டம் நடத்தினர். அதில் சிறுபான்மை மக்களும் கலந்துகொண்டார்கள். ஆனால் அவரை சிறுபான்மை மக்கள் மட்டும் விரட்டியடிக்கவில்லை.

ஆனால் அவரின் புத்தகத்தில் சிறுபான்மை மக்களே அவரை விரட்ட நடவடிக்கை எடுத்தார் என்ற அவரின் கூற்று மிகவும் வெறுக்கத்தக்கதாகும். அவர் ஆட்சியில் இருக்கும்போது முஸ்லிம் மக்களுக்கு எதிராக திட்டமிட்டு செயற்பட்டார். குறிப்பாக கொவிட்  தொற்றுக்குள்ளான முஸ்லிம்களின் சடலங்களை எரிக்கும்போது, அதனை செய்ய வேண்டாம் என உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட அனைத்து நாடுகளும் கேட்டுக்கொண்டபோதும் அதனை கோத்தாபய ராஜபக்ஷ்வும் அதன் அரசாங்கமும் கண்டுகொள்ளவில்லை.

அதனால் கோத்தாய ராஜபக்ஷ தனது பதவியை விட்டு செல்வதற்கு முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்கள் திட்டமிடவில்லை. மாறாக இலங்கையர்கள் என்றவகையில் தனிப்பட்ட ரீதியில் அந்த போராட்டத்தில் சம்பந்தப்பட்டிருப்பார்கள். ஆனால் கோத்தாபயவுக்கு ஏற்பட்டது இறைவனின் சாபம் என்ற நான் நினைக்கிறேன்.

சடலங்களை எரித்து முஸ்லிம் மக்களின் உள்ளங்களை புண்படுத்தினார். முஸ்லிம் மக்களுக்கு எதிராக கோத்தாபய ராஜபக்ஷ் செயற்பட்டபோதும் இறுதியில் அவருக்கு தஞ்சம் வழங்க எந்த பெளத்த நாடும் முன்வரவில்லை. மாலை தீவே அவருக்கும் தஞ்வம் கொடுத்தது. அதன் பின்னர் அங்கிருந்து சவூதி விமான சேவை ஊடாகவே சிங்கப்பூருக்கு சென்றார். அப்போது முஸ்லிம்கள் யாரும் அவருக்கு எதிராக செயற்படவில்லை.

எனவே அதிகாரத்தை பெற்றுக்கொள்ளவே கோத்தாபய ராஜபக்ஷ சிறுபான்மை மக்களுக்கு எதராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலையும் அதற்காக பயன்படுத்திக்கொண்டார். ஆனால் இதுவரை பாதிக்கப்பட்ட மக்கள் நீதி கிடைக்கவில்லை. அதனால் கோத்தாபய ராஜபக்ஷ தனது புத்தகத்தில் எழுதியிருக்கும் பிழையான கருத்துக்களை திருத்திக்கொள்ள வேண்டும். ஏனெனில் இது வரலாற்றில் பதிவாகும் என்றார்.