நீதிமன்ற அனுமதியுடன் முதல் கட்டமாக 300 கிலோ கிராம் போதைப்பொருட்கள் அழிக்கப்படும்

38 0

நீதிமன்றத்தின் அனுமதியுடன் முதல் கட்டமாக 300 கிலோ கிராம் அபாயகரமான போதைப்பொருட்கள் வனாத்தவில்வு பகுதியில்  நவீன முறையில் எதிர்வரும் மாதம்  அழிக்கப்படும்.

அதனை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் கைப்பற்றப்படும் போதைப்பொருட்கள் முறையாக அழிக்கப்படும் என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்  விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (24) இடம்பெற்ற  குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் இரண்டாவது மதிப்பீடு,நஞ்சு வகைகள்,அபின் மற்றும் அபாயகர ஔடதங்கள் பற்றிய கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி என்பன விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

வழக்கு பொருளாக நீதிமன்ற களஞ்சியசாலைகளில் வைக்கப்பட்டுள்ள  போதைப்பொருட்களை பாதுகாப்பது பாரிய பிரச்சினையாக காணப்படுகிறது.களஞ்சியசாலைகளில் வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்களை  முறையற்ற வகையில் வியாபாரம் செய்த குற்றச்சாட்டில் நீதிமன்ற சேவையாளர்கள் பலர் சிறையில் உள்ளார்கள்.

வழக்கு பொருளாக பெருமளவிலான போதைப்பொருட்களை  நீதிமன்ற களஞ்சியசாலைகளில் வைத்திருப்பது  பயனற்றது. நீதிமன்ற  விசாரணைக்கு ஒன்று அல்லது ஐந்து கிராம் போதைப்பொருள் மாதிரிகளை  சாட்சிப் பொருளாக வைத்து விட்டு ஏனையவற்றை அழிப்பது குறித்து  பலதரப்பு பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன.

பொது மக்கள் வாழும் அல்லது நடமாடும் இடத்தில் அபாயகரமான போதைப்பொருட்களை அழிக்க முடியாது.அதற்கு அனுமதி வழங்க முடியாது என தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை குறிப்பிட்டது.இதற்கமைய  வனாத்தவில்லு பொலிஸாருக்கு சொந்தமான இடத்தில் இந்த போதைப்பொருள்களை அழிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நவீன தொழில்நுட்ப வசதிகளுக்கு அமையவே போதைப்பொருட்களை அழிக்க வேண்டும்.இதற்கான இயந்திரத்தை பொருத்துவதற்கு 18 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.இதற்கான நடவடிக்கைகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளன.எதிர்வரும் மாதம் முதல் போதைப்பொருள்களை அழிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

நீதிமன்றத்தின் அனுமதியுடன் முதல் கட்டமாக 300   கிலோ கிராம் அபாயகரமான போதைப்பொருட்கள் எதிர்வரும் மாதம்  நவீன முறையில் அழிக்கப்படும். அதனை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் கைப்பற்றப்படும் போதைப்பொருட்கள் முறையாக அழிக்கப்படும் என்றார்.