மீன்பிடி தடை காலத்தால் மீன்வரத்து குறைந்தது: காசிமேட்டில் மக்கள் ஏமாற்றம்

15 0

ஆழ்கடலில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்குக் கடற்கரை பகுதியில் ஆண்டுதோறும் ஏப்.15-ம் தேதி முதல் ஜுன் 14-ம் தேதி வரை 61 நாட்களுக்கு விசைப் படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. இதன்படி, இந்த ஆண்டுக்கான மீன்பிடித் தடைக்காலம் கடந்த 15-ம் தேதியன்று தொடங்கியது.

இதனால், மீனவர்கள் விசைப் படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர். கட்டுமரம், பைபர் படகுகள், வள்ளம் உள்ளிட்ட நாட்டுப் படகுகள் மூலம் மீனவர்கள் அண்மைக் கடல் பகுதியில் சென்று மீன்பிடித்து வருகின்றனர்.மீன்பிடித் தடைக் காலம் அமலுக்கு வந்த பிறகு முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று 100 பைபர் படகுகளில் மட்டுமே மீனவர்கள் மீன்பிடித்து வந்தனர். இதனால், குறைந்த அளவு மீன்களே கிடைத்தன. இதனால், காசிமேட்டுக்கு மீன் வாங்க சென்ற மீன் பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

வஞ்சிரம், வவ்வால்: குறிப்பாக, கவளை, நெத்திலி, சங்கரா ஆகிய மீன்கள் மட்டுமே கிடைத்தன. வஞ்சிரம், வவ்வால் உள்ளிட்ட பெரிய வகை மீன்கள் கிடைக்கவில்லை. அதேசமயம் கேரளா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மீன்கள் மீன் மார்க்கெட்டுகளில் வழக்கம் போல விற்பனை செய்யப்பட்டன.