வாக்காளர்களுக்கு பண விநியோகத்தை தடுக்க தீவிர நடவடிக்கை: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தகவல்

16 0

தமிழகத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் உட்பட 44,800 வாக்குச்சாவடிகளில் ‘வெப் கேமரா’ பொருத்தப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாஹு தெரிவித்தார். மேலும் வாக்காளர்களுக்கு பண விநியோகத்தை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. பறக்கும்படை, நிலை கண்காணிப்புக் குழுக்களின் சோதனையில் ஏப்.17 காலை வரை ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.79.90 கோடியும், வருமானவரித் துறையால் ரூ.90.40 கோடியும் என மொத்தம் ரூ.170.35 கோடி ரொக்கம் பறிமுதலாகியுள்ளது.இதுதவிர ரூ.6.11 கோடி மதிப்பு மதுபானங்கள், ரூ.1.10 கோடி மதிப்பு போதை பொருட்கள், ரூ.1,083 கோடிமதிப்பு தங்கம் உள்ளிட்ட விலையுயர்ந்த உலோகங்கள், ரூ.35.76 கோடி மதிப்பு பரிசுப் பொருட்கள் என ரூ.1,297.07 கோடி மதிப்புள்ளவை கைப்பற்றப்பட்டன.

தபால் வாக்குக்காக விண்ணப்பித்தவர்களில் 90 சதவீதம் பேர் வாக்குகளை பதிவு செய்துவிட்டனர். விடுபட்டவர்களுக்கு இன்று மாலை வரை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தபால் வாக்குகளை செலுத்தலாம்.

இந்த தபால் வாக்குகள் திருச்சி கலையரங்கில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, தொகுதிவாரியாக பிரித்து அனுப்பப்படும். அதன் பின்னர்ஒருங்கிணைப்பு மையம் கலைக்கப்படும். பிறகு 18-ம் தேதி பெறப்படும் தபால் வாக்குகள், ஜூன் 3-க்குள் அந்தந்ததொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களால் பரிமாறிக் கொள்ளப்படும்.

தமிழகத்தில் 68,321 பதற்றமான வாக்குச்சாவடிகள் உட்பட 65 சதவீதம்,அதாவது 44,800 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவைகளை மாநில கட்டுப்பாட்டு அறைகளில் இருந்து கண்காணிக்கலாம். வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாள்வதற்காக 10 வாக்குச்சாவடிகளுக்கு ஒரு மண்டல குழு என்ற அடிப்படையில் 6,137 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதேபோல், ஒருவர் தன் வாக்கை வேறு ஒருவர் பதிவு செய்துள்ளதாக அறிந்தால், வாக்குச்சாவடி தலைமை அலுவலரிடம் புகார் அளித்து உரிய நடைமுறைக்கு பின் வாக்குச்சீட்டு மூலம்டெண்டர் வாக்களிக்க அனுமதிக்கப்படு வார். இதற்கென தனியாக வாக்குச் சீட்டுகள் அளிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விவி பாட் இயந்திர ஒப்புகை சீட்டில்தவறான சின்னம் வந்தால், வாக்குச்சாவடி தலைமை அலுவலரிடம் வாக்காளர் புகார் அளிக்கலாம். அவர், முகவர்கள் முன்னிலையில் வாக்களித்து பார்த்து, புகார் உண்மை என்றால், வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு மாற்றுஇயந்திரம் வைக்கப்படும். அதேநேரம் புகார் தவறு என கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட வாக்காளர் காவல் துறையில் ஒப்படைக்கப்படுவார். சிறையில் உள்ள கைதிகளுக்கு தபால் வாக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு தெரிவித்தார்.

சேலஞ்ச், டெண்டர் வாக்கு: சேலஞ்ச், டெண்டர் வாக்கு குறித்துசத்யபிரத சாஹு கூறும்போது, ‘‘வாக்குப்பதிவு நடைபெறும் போது, ஒரு வாக்காளர் மீது சந்தேகம் ஏற்படும்பட்சத்தில்ரூ.2 கட்டணம் செலுத்தி, அவரது அடையாளம் ஆய்வு செய்யப்படும். அதில் திருப்தி ஏற்பட்டால் அவர் ‘சேலஞ்ச்’ வாக்கு செலுத்த அனுமதிக்கப்படுவார். ஒரு வேளை அவர் தவறானவர் என தெரிந்தால், காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படுவார்.