அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் நியமனத்தை எதிர்த்து வழக்கு: துணைவேந்தர், உயர்கல்வித்துறை செயலர் பதிலளிக்க உத்தரவு

20 0

சென்னை அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் நியமனத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் தமிழக அரசின் உயர்கல்வித்துறை செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக எம்எல்ஏவும், அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினருமான பரந்தாமன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘சென்னை அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பதவியை நிரப்புவது தொடர்பான சிண்டிகேட் கூட்டத்தில், பதிவாளராக டாக்டர் பிரகாஷ் என்பவரை நியமிக்க துணைவேந்தர் கருத்துருவை முன்வைத்தார். ஆனால் அதற்கு நான் உள்ளிட்ட சிண்டிகேட் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தோம்.ஆனால், அடுத்த சிண்டிகேட் கூட்டத்தின்போது பல்கலைக்கழகபதிவாளராக பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளதாக துணைவேந்தர் தெரிவித்தார். மொத்தம் உள்ள 13 சிண்டிகேட் உறுப்பினர்களில் 9 பேர்பதிவாளராக பிரகாஷை நியமிக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

ஆனால் 6 உறுப்பினர்கள் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்ததுபோல திருத்தம் செய்து பிரகாஷைபதிவாளராக நியமித்துள்ளனர். இது சட்டவிரோதம். எனவே பதிவாளராக பிரகாஷின் நியமனத்தைரத்து செய்ய வேண்டும். என அதில் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.பரதசக்ரவர்த்தி இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தமிழக அரசின் உயர்கல்வித்துறை செயலர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூன் 7-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார். மேலும், இரு சிண்டிகேட் கூட்டங்களின் வீடியோக்களையும் பத்திரப்படுத்த வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும் உத்தரவிட்டுள்ளார்.