ஜான் பாண்டியனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த தலைவர்கள் – பாஜக தொண்டர்கள் உற்சாகம்

23 0

தென்காசி தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஜான் பாண்டியன் சார்பாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பிரச்சாரம் செய்துள்ளதால் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தென்காசி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் ராணி, அதிமுக கூட்டணி சார்பில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, பாஜக கூட்டணி சார்பில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன், நாம் தமிழர் சார்பில் மதிவாணன் உட்பட 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக வேட்பாளர் ராணியை அறிமுகம் செய்து வைத்து முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.தென்காசி, சங்கரன்கோவிலில் அமைச்சர் உதயநிதி, கனிமொழி எம்பி, ஸ்ரீவில்லிபுத்தூரில் காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, திண்டுக்கல் லியோனி, புளியங் குடியில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் பிரச்சாரம் செய்தனர். அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமிக்கு ஆதரவாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி சங்கரன்கோவில் பொதுக்கூட்டத்திலும், ஸ்ரீவில்லிபுத்தூரில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா பிரச்சாரம் செய்தனர்.

கிருஷ்ணசாமிக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, ராஜலட்சுமி, கிருஷ்ணமுரளி எம்எல்ஏ, கிருஷ்ணசாமி மகன் ஷியாம் ஆகியோர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஜான் பாண்டியனுக்கு ஆதரவாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜநாத் சிங் ராஜபாளையத்திலும், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தென்காசியிலும் ‘ரோடு ஷோ’ மூலம் பிரச்சாரம் செய்தனர்.

முக்குலத்தோர் சமுதாய வாக்குகள் அதிகம் உள்ள தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில் பகுதிகளில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் நயினார் நாகேந்திரன், நாடார் சமுதாய வாக்குகள் அதிகம் உள்ள சுரண்டையில் நடிகர் சரத்குமார் ஆகியோர் பிரச்சாரம் செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் தமாக தலைவர் ஜி.கே.வாசன் நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.

ராஜபாளையத்தில் நடந்த வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டார். ஜான் பாண்டியனுக்கு ஆதரவாக அவரது மகன், மகள் ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஜான் பாண்டியனின் மனைவியும், சகோதரரும் சமுதாய தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஜே.பி.நட்டா, ராஜ்நாத் சிங் வருகையால் பாஜக கூட்டணிக் கட்சி தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இன்று இரவு 7 மணியுடன் பிரச்சாரம் முடிய உள்ள நிலையில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் அரசியல் கட்சி நிர்வாகிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.