வீடு வீடாக துண்டுப் பிரசுரம்: கிராமப்புற மக்களை குறிவைக்கும் நாம் தமிழர் கட்சி @ திண்டுக்கல்

15 0

திண்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சியினர் கிராமப்புறங் களைக் குறிவைத்து இளைஞர்கள் ஆதரவுடன் மக்களைச் சந்தித்து துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்து அமைதியான முறையில் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் வேட் பாளர் ஆர்.சச்சிதானந்தம், எஸ்.டி.பி.ஐ., வேட்பாளர் முகமது முபாரக், பாமக., வேட்பாளர் திலக பாமா, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கயிலை ராஜன் ஆகியோரிடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. மார்க்சிஸ்ட் வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோர் தலைமையில் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

எஸ்டிபிஐ., வேட்பாளர் முகமது முபாரக்கை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன் ஆகியோர் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாமக வேட்பாளரை ஆதரித்து பாஜக, பாமக நிர்வாகிகள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நாம் தமிழர் கட்சியைப் பொருத்தவரை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் செய்துவிட்டுச் சென்றபிறகு மற்ற கட்சிகளைப் போல் பிரச்சாரம் மேற்கொள்ளாமல், உத்திகளை மாற்றி வீடு வீடாகச் சென்று நேரடியாக மக்களைச் சந்தித்து தங்கள் பிரச்சாரத்தை மேற்கொள் கின்றனர். மற்ற கட்சியினரை போல் அல்லாமல், இவர்கள் மக்களை வீடுகளுக்கே நேரடியாகச் சென்று அணுகுகின்றனர்.

வேலையில்லா திண்டாட்டம், பிற மாநிலத்தவர் வேலையைப் பறிக்கிறார்கள், ஆட்சியில் இருந்த கட்சிகள் மேல் உள்ள அதிருப்தி ஆகியவற்றைக் கூறி கிராமப்புற இளைஞர்களை தங்கள் கட்சிக்கு ஆதரவாக திருப்பியுள்ளனர். முன்னதாக ஒவ்வொரு கிராமத்திலும் நான்கு, ஐந்து இளைஞர்கள் நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர்களாக உள்ளனர்.

இவர்கள் பெரிய கூட்டத்தை எல்லாம் கூட்டிக்கொண்டு பிரச்சாரத்துக்குச் செல்லாமல், தங்கள் கிராமத்தில் உள்ள மக்களை வீடு வீடாகச்சென்று உரிமையுடன் உறவுகளைச் சொல்லி அழைத்து துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து ஆதரவு திரட்டுகின்றனர். மது மயக்கத்தில் இருக்கும் இளைஞர்கள் எங்கள் பக்கம் வருவதில்லை என்றும் கூறுகின்றனர்.

திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரு தொகுதிக்கு ஒரு லட்சம் துண்டுப் பிரசுரங்கள் வழங்க வேண்டும் என நாம்தமிழர் கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து ஆறு லட்சம் துண்டுப் பிரசுரங்களை நாம் தமிழர் கட்சியினர் கிராமங்களில் வீடு வீடாகச் சென்று விநியோகித்துள்ளனர். கிராமப் புற இளைஞர்களின் பணி நாம் தமிழர் கட்சியை கடந்த தேர்தலை விட கூடுதல் வாக்குகளைப் பெற்றுத் தரும் என அக்கட்சி நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

பிரச்சாரக் களத்தில் நாம் தமிழர் கட்சியினரின் சத்தத்தை காணவில்லையே என மற்ற கட்சியினர் கண்காணித்த போது, அவர்கள் வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்கள் விநியோகிப்பது தெரியவந்தது. அந்தஅளவுக்கு திண்டுக்கல் தொகுதியில் பிரச்சாரத்தையே அமைதியாக, ஆர்ப்பாட்டம் இல்லாமல் மேற்கொண்டு வருகின்றனர் நாம் தமிழர் கட்சியினர். இவர்களது பிரச்சார உத்தி எந்த அளவுக்குப் பலனளிக்கும் என்பது தேர்தல் முடிவுகளில் தெரியவரும்.