மியன்மாரில் மீட்கப்பட்ட 8 இலங்கையர்கள் வெகுவிரைவில் இலங்கைக்குத் திருப்பியனுப்பப்படுவர்

20 0

மியன்மாரின் மியவடி பகுதியிலிருந்து மீட்கப்பட்ட 8 இலங்கையர்கள் பாங்கொக்கில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகளால் வியாழக்கிழமை (11) பொறுப்பேற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாகவும், அவர்கள் வெகுவிரைவில் இலங்கைக்குத் திருப்பியனுப்பிவைக்கப்படுவார்கள் எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

‘மியன்மாரின் மியவடி பகுதியிலிருந்து கடந்த மார்ச் 4 ஆம் திகதி மியன்மார் நாட்டு அதிகாரிகளால் மீட்கப்பட்ட இலங்கையர்கள் அவ்வதிகாரிகளின் பாதுகாப்பின்கீழ் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அதனைத்தொடர்ந்து அவர்கள் தாய்லாந்தின் மியோஸோற் அழைத்துச்செல்லப்பட்டு, தாய்லாந்து குடியகல்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். தற்போது அவர்கள் பாங்கொக்கில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பில் உள்ளனர்’ என வெளிவிவகார அமைச்சு இதுபற்றி விளக்கமளித்துள்ளது.

அதேவேளை மியன்மார் அதிகாரிகளால் மீட்கப்பட்ட இலங்கையர்களை இலங்கைக்கு அழைத்துவருவது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மியன்மார் மற்றும் தாய்லாந்து நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் கலந்துரையாடியிருந்தார்.

அதற்கமைய அவசியமான தேவைப்பாடுகள் பூர்த்திசெய்யப்பட்டவுடன் பாங்கொக் மற்றும் யாங்கொனில் உள்ள இலங்கை தூதரகங்கள், இலங்கை வெளிவிவகார அமைச்சுடன் இணைந்து மீட்கப்பட்ட இலங்கையர்களை நாட்டுக்குத் திருப்பியனுப்பிவைக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.