தபால் சேவை வெள்ளிக்கிழமை இடம்பெறும் !

114 0

வெளிநாடுகளிலிருந்து இலங்கையிலுள்ளவர்களுக்கு பெருமளவான பொதிகள் அனுப்பப்பட்டுள்ளன. எனவே அவற்றை உரிய நேரத்தில் உரியவர்களிடம் சேர்க்க வேண்டும் என்பதால் 12ஆம் திகதி தபால் சேவையை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தபால் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வெளிநாடுகளிலிருந்து இலங்கையிலுள்ள தமது உறவினர்களுக்கு பெருமளவான பொதிகள் அனுப்பப்பட்டுள்ளன. அவற்றை உரிய நேரத்தில் உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதால், 12ஆம் திகதி விடுமுறை என்ற போதிலும், அன்றைய தினம் சேவைக்கு சமூகமளிப்பதற்கு சகல தபால் ஊழியர்களும் தீர்மானித்துள்ளனர். இதற்குரிய ஒத்துழைப்பினை வழங்குவதாக சுங்க திணைக்களமும் உறுதியளித்துள்ளது.

நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த தபால் திணைக்களம் தற்போது இலாபமீட்டத் தொடங்கியுள்ளது. எனினும் அத்தியாவசிய சேவைகளில் காணப்படும் ஆள் பற்றாக்குறை இந்த பயணத்துக்கு தடையாகவுள்ளது. எனவே அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் ஆட்சேர்ப்பதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது.

இலங்கை மனித வள முகாமைத்துவத்தில் பாரிய சிக்கல்கள் காணப்படுகின்றன. பாராளுமன்றத்தில் ஆலோசனை குழுக்களிடம் இது தொடர்பில் பல கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றோம்.

அதற்கமைய உள்ளக இடமாற்றங்களை வழங்குமாறும் யோசனை முன்வைத்திருக்கின்றோம். காரணம் அரச சேவைகளில் சில இடங்களில் தேவைக்கதிகமான ஊழியர்கள் உள்ளனர். மறுபுறம் தேவையான இடங்களில் பற்றாக்குறை நிலவுகிறது என்றார்.