நீண்ட காலமாக முறையான விடுமுறையின்றி சேவையிலிருந்து விலகியிருந்த இராணுவ வீரர்களுக்கு சட்ட ரீதியாக இராணுவ சேவையை விட்டு வெளியேறுவதற்கு பொது மன்னிப்பு காலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய முறையான விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத மற்றும் சட்ட விரோதமான முறையில் சேவையை விட்டு வெளியேறியுள்ள இலங்கை இராணுவத்தின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு இம்மாதம் 20ஆம் திகதி முதல் மே 20ஆம் திகதி வரை பொது மன்னிப்பு காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 2ஆம் திகதிக்கு முன்னர் முறையான விடுமுறையின்றி பணிக்கு சமூகமளிக்காத அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு இந்த பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொது மன்னிப்பு காலத்துக்கான இறுதி திகதி எக்காரணத்துக்காகவும் நீடிக்கப்பட மாட்டாது என இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது.
இராணுவ அடையாள அட்டை, தேசிய அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதி பத்திரம், சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் வரவு வைக்கப்பட்டுள்ள வங்கி புத்தகத்தின் நகல், கடைசியாகப் பெற்றுக் கொண்ட சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளின் சம்பளப் பட்டியல் நகல் என்பவற்றை அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

