ஜனாதிபதித் தேர்தல் சட்டம், பாராளுமன்றத் தேர்தல் சட்டம் மற்றும் மாகாண சபைத் தேர்தல் சட்டம் ஆகியவற்றின் ஏற்பாடுகளுக்கமைய தற்போதுள்ள பிணை வைப்பு பணத் தொகையை காலத்துக்கு ஏற்ற வகையில் தற்போதைய சமூக, பொருளாதார மற்றும் அரசியல் பின்னணிக்கு ஏற்ப திருத்தம் செய்தல் பொருத்தமானது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதற்கமைய, பின்வரும் வகையில் ஏற்புடைய பிணை வைப்புப்பணத் தொகையை திருத்தம் செய்வதற்கான சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஜனாதிபதி மற்றும் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த ஒருங்கிணைந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
1981ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல் சட்டத்துக்கமைய அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியால் சமர்ப்பிக்கப்படும் வேட்பாளர் ஒருவரின் பிணை வைப்புத் தொகை 2.6 மில்லியன் ரூபா வரையும், சுயேட்சை வேட்பாளரின் பிணை வைப்புத் தொகையை 3.1 மில்லியன் ரூபா வரையும் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
1981 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல் சட்டத்துக்கமைய அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியால் சமர்ப்பிக்கப்படும் வேட்பாளர் ஒருவரின் பிணை வைப்புத்தொகையை 11000 ரூபா வரையும், சுயேட்சைக் குழுவின் வேட்பாளர் ஒருவரின் பிணை வைப்பை 16000 ரூபா வரையும் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
1988 ஆண்டின் 2 இலக்க மாகாண சபைகள் தேர்தல் சட்டத்துக்கமைய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியால் சமர்ப்பிக்கப்படும் வேட்பாளர் ஒருவரின் பிணை வைப்புத் தொகையை 6000 ரூபா வரையும் சுயேட்சைக் குழு வேட்பாளர் ஒருவரின் பிணை வைப்புத் தொகையை 11 000 ரூபா வரையும் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

