ஒரு கோடி ரூபா பெறுமதியான பொருட்களுடன் தம்பதி உட்பட 12 பேர் கைது!

115 0

போதைப்பொருள் கடத்தல்காரர்களாகச் சந்தேகிக்கப்படும் தம்பதியும் அவர்களுடன் தொடர்புகளைப் பேணியதாகக் கூறப்படும் 12 பேரும் ஒரு கோடி ரூபா பெறுமதியான பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

வென்னப்புவ பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மோருக்குளிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 7,000 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பிரதான சந்தேக நபர்களான  குறித்த தம்பதியும் அவர்களுடன் தொடர்புகளைப் பேணியதாகக் கூறப்படும் 12 பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பன்னல, கிரியுள்ள , கந்தானகெதர, மாகதுர தங்கொடுவ கொஸ்வத்த ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணையில் சந்தேக நபர்களிடமிருந்து சொகுசு கார் , 8 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.