மேட்டூர் அணை நீர்மட்டம் 26 அடியாக சரிவு – சேலம் உள்பட 12 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு

226 0

மேட்டூர் அணை நீர்மட்டம் 26 அடியாக சரிந்துள்ளதால் சேலம் உள்பட 12 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்புபடி கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடாததாலும், பருவ மழை பொய்த்ததாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து முற்றிலும் குறைந்தது.

இதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக சரிந்து நேற்று 26.31 அடியாக இருந்தது. இன்று மேலும் சரிந்து 26.10 அடியானது. அணைக்கு நீர்வரத்து 37 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்த பல மடங்கு தண்ணீர் வெளியேற்றப்படுவதால் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருவதால் அணை குட்டை போல காட்சி அளிக்கிறது.இதற்கிடையே மாநில மற்றும் மாவட்ட அதிகாரிகள் கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு வந்து ஆய்வு நடத்தினர். அப்போது அணையில் இருந்து குடிநீருக்காக திறந்து விடப்படும் தண்ணீரை விவசாயத்திற்காக காவிரி ஆற்றில் இருந்து நேரடியாக உறிஞ்சி எடுத்த மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி திறந்து விடப்படும் தண்ணீரை தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படுவதும் குறைக்கப்பட்டுள்ளது.தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது தொடர்பாக தமிழக வருவாய் நிர்வாக ஆணையாளர் சத்யகோபால் கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தி சில அறிவுரைகளை வழங்கி உள்ளார்.

காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் பல்வேறு வழிகளிலும் விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு சுரண்டப்படுவதால் டெல்டா மாவட்டங்களின் பல பகுதிக்கு தண்ணீர் சென்றடையவில்லை. அந்த பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் முற்றிலும் சரிந்துள்ளது.

இதனால் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், புதுக்கோட்டை ஆகிய 12 மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கேன் தண்ணீரை வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு பொது மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

குடிநீர் கிடைக்காததால் சேலம் உள்பட பல மாவட்டங்களில் சாலை மறியல் உள்பட பல்வேறு போராட்டங்களில் பொது மக்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. போலீசார் அவர்களை சமாதானம் செய்து வருகிறார்கள்.

சேலம் மாநகரில் கடந்த சில நாட்களாக மாநகராட்சி மூலம் மிக குறைந்த அளவிலேயே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொது மக்கள் அத்தியாவசிய தேவைக்கு கூட தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். இனி வரும் நாட்களில் மழை கை கொடுத்தால் மட்டுமே குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.