இலங்கையைப் பூர்வீகமாகக்கொண்ட பற்ரிக் மென்டிஸ் அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கல்வி சபை ஆலோசகராக நியமனம்

15 0

இலங்கையைப் பூர்விகமாகக்கொண்ட அமெரிக்க இராஜதந்திரியான கலாநிதி பற்ரிக் மென்டிஸ் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கல்வி சபையின் ஆலோசகராக ஜனாதிபதி ஜோ பைடனால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் பொலனறுவை மாவட்டத்தில் 1960 ஆம் ஆண்டு பிறந்த பற்ரிக் மென்டிஸ், ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக கடமையாற்றியிருப்பதுடன், ‘சர்வோதயம்’ அமைப்பு, சாரணர் இயக்கம், பொலிஸ் மற்றும் இராணுவப் பயிற்சி கடேற்ஸ் போன்ற பல்வேறு அமைப்புக்களில் இணைந்து முனைப்புடன் இயங்கிவந்திருக்கின்றார்.

இலங்கையிலும், அமெரிக்காவிலும் தனது கல்வியை நிறைவுசெய்த அவர், அமெரிக்காவில் நீண்டகாலமாக முக்கிய பல இராஜதந்திர பதவிகளை வகித்துள்ளார்.

குறிப்பாக நேட்டோவின் இராணுவப் பேராசிரியராக கடமையாற்றிய அவர், கிளின்டன், ஜோர்ஜ் புஷ், ஒபாமா ஆகியோரின் நிர்வாகத்தின்கீழ் இந்திய – பசுபிக் கட்டளை அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார். அதுமாத்திரமன்றி அவர் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தில் விவசாயம், பாதுகாப்பு, வலுசக்தி உள்ளிட்ட துறைசார் பிரிவுகளில் உயர் பதவிகளை வகித்துள்ளார்.

அதன் நீட்சியாக தற்போது அவர் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கல்வி சபையின் ஆலோசகராக ஜனாதிபதி ஜோ பைடனால் நியமிக்கப்பட்டுள்ளார். ­