‘எல்லாவற்றையும் இழந்துவிட்டேன்’ – 25 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சாம் பேங்க்மேன் வருத்தம்

14 0

 தன்னுடைய கிரிப்ட்டோ நிறுவனம் மூலம், வாடிக்கையாளர்களின் 8 பில்லியன் டாலர் (ரூ.66,400 கோடி) பணத்தை மோசடி செய்ததாக, கடந்த வாரம் அமெரிக்க நீதிமன்றம் சாம் பேங்க்மேனுக்கு 25 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சாம் பேங்க்மேன், தன்னுடைய சரிவு குறித்து பகிர்ந்துள்ளார். ‘‘2022-ம் ஆண்டில் நான்எடுத்த பல தவறான முடிவுகள் காரணமாகவே எப்டிஎக்ஸ் திவாலானது. நான் மேற்கொண்ட நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை என்று அந்த சமயத்தில் நினைக்கவில்லை. பல வாடிக்கையாளர்கள் கடுமையான இழப்பைச் சந்தித்து இருக்கிறார்கள்.என் சக ஊழியர்கள் குறித்தும் மிகுந்த வலியை உணர்கிறேன். என் வசம் உள்ளஎல்லாவற்றையும் இழந்துவிட்டேன். அது என்னை ஒவ்வொருநாளும் சித்ரவதைக்கு உள்ளாக்குகிறது. நான் யாரையும் காயப்படுத்த வேண்டும் என்றோ ஏமாற்றவேண்டும் என்றே நினைக்க வில்லை’’ என்றார்.

சாம் பேங்க்மேன் 2017-ம் ஆண்டு அலமேதா ரிசர்ச் என்ற டிரேடிங் நிறுவனத்தை தொடங்கி நடத்திவந்தார். அதையடுத்து கிரிப்டோ கரன்சி உலகத்தில் தீவிரமாக கால்பதிக்க விரும்பிய அவர் தன் நண்பருடன் இணைந்து ‘எப்டிஎக்ஸ்’ நிறுவனத்தை 2019-ம் ஆண்டு தொடங்கினார்.

கரோனா காலகட்டத்தில் கிரிப்டோகரன்சி மதிப்பு அதிகரித்த நிலையில் இந்நிறுவனம் மிகப் பெரும் லாபம் ஈட்டியது. உலக பில்லியனர்களில் ஒருவராக சாம் பேங்க்மேன் வலம் வந்தார்.

எப்டிஎக்ஸ் பெரும் லாபம் ஈட்டத்தொடங்கிய நிலையில், அந்நிறுவனம் எப்டிடி என்ற பெயரில் தங்கள் நிறுவனத்துக்கென்று சொந்த கிரிப்டோ கரன்சியை அறிமுகம் செய்தது. அதில் முதலீடு செய்பவர்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்தது. இதனால், பலர் அதில் முதலீடு செய்யத் தொடங்கினர். எப்டிடி கிரிப்டோ கரன்சி மதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது.

இந்நிலையில் அலமேதா ரிசர்ச் நிறுவனம் மறைமுகமாக எப்டிஎக்ஸ் நிறுவனத்தின் எப்டிடி கிரிப்டோ கரன்சியைப் பயன்படுத்தி லாபம் ஈட்டியதாக 2022-ம் ஆண்டு செய்தி வெளியானது. இதையடுத்து எப்டிஎக்ஸ் நிறுவனத் தின் மதிப்பு மளமளவென சரிந்து 1 டாலராக குறைந்தது.