வருடாந்தம் 4 பில்லியன் டொலர் வருமானத்தை சுங்கத்திணைக்களம் இழக்கிறது

103 0

பல்வேறு வகையான வரிகள் ஊடாக இந்த ஆண்டு மாத்திரம் 600 பில்லியன் வரி வருமானத்தை  திரட்டிக் கொள்ள அரசாங்கம் உத்தேசித்துள்ள நிலையில்  1066 பில்லியன் ரூபா வரியை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வசூலிக்கவில்லை.

அத்துடன் பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் போது தவறான  விலைபட்டியல் மூலம் ஆண்டு தோறும் 4 பில்லியன் டொலர் வருமானத்தை சுங்கத்திணைக்களம் இழக்கிறது. தவறுகளை திருத்திக் கொள்ளுமாறு ஆலோசனை வழங்கி உரிய வழிமுறை முன்வைத்துள்ள போதும் அவை செயற்படுத்தப்படவில்லை என  வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அதிருப்தி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (01) இடம்பெற்ற அமர்வின் போது  வழிவகைகள் பற்றிய குழுவின் முதலாவது அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

இலங்கையின் தேசிய வருமானத்தில் இறைவரித் திணைக்களம், மதுவரித் திணைக்களம் மற்றும் சுங்கத் திணைக்களம்  முக்கிய பங்கு வகிக்கின்றன.

இருப்பினும் இந்நிறுவனங்கள்  முறையாக வரி அறவிடுவதில்லை.இதனால் தொடர்ச்சியாக அரச வருமானம் நீக்கப்பட்டுள்ளது.

தேசிய இறைவரித்  திணைக்களம்  2023.12.31 ஆம்  திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம்  1066 பில்லியன்  ரூபா வரியை அறவிடவில்லை.  அத்துடன் 1 முதல் 5 ஆண்டு வரையான காலப்பகுதியில் மாத்திரம் 656 பில்லியன் ரூபா இழக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் சேர்பெறுமதி வரி (வற் வரி) 18 சதவீதத்தால் உயர்வடைந்துள்ளது. இதன் ஊடாக  600 பில்லியன் ரூபா வரி வருமானத்தை திரட்டிக்கொள்ள அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

ஆனால் இறைவரித் திணைக்களம்  பல கோடி ரூபா வரியை அறவிடவில்லை. இந்த  வரிகளை முறையாக அறவிடுவதற்கு சட்டம் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கியுள்ளோம். இருப்பினும் நிதியமைச்சு முன்னேற்றகரமான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

சுங்கத் திணைக்களத்தின் முறையற்ற செயற்பாடுகளினால் 58.6 பில்லியன் ரூபா வரி வருமானம் நீக்கப்பட்டுள்ளது. சுங்கத் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து தொழில்நுட்ப மட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து உரிய ஆலோசனைகள் வழங்கியுள்ளோம்.

பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் போது  தவறான  விலைப்பட்டியல் மூலம் ஆண்டுதோறும் 4 பில்லியன் டொலர் இழக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்படும் பொருட்களை சுங்கத்தில்  உள்ள ஸ்கேனர்கள் மூலம் பறிமுதல்  செய்வது செயலிழந்திருத்தல் மற்றும் தங்கம் போன்ற  பெறுமதியான பொருட்களை  சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரும் போது செயற்படும் முறைமை தொடர்பில் புதிய திட்டங்களை வகுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.

இலங்கை மதுவரித் திணைக்களம் 700 கோடி ரூபா வரியை அறவிடவில்லை. மதுபான உற்பத்தியில் முன்னிலையில் உள்ள  இரு பிரதான நிறுவனங்கள்  வரி வருமான இழப்பில்  70 சதவீத பங்கு வகிக்கின்றன. மது உற்பத்தியாளர்கள்  வரி செலுத்த தவறுதல் மற்றும் மதுவரித் திணைக்களம் டிஜிட்டல் மயப்படுத்தல் தொடர்பாக  தீவிர கவனம் செலுத்தப்பட்டது என்றார்.