சபாநாயகரை சந்தித்தார் ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர்

106 0

ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ்ச் (Marc-André Franch) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை கடந்த 22ஆம் திகதி பாராளுமன்றத்தில் சந்தித்தார்.

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலங்கள், பாராளுமன்றத்துக்கு முன்வைக்கப்படவுள்ள சட்டமூலங்கள், பாராளுமன்ற அபிவிருத்தி தொடர்பான செயற்பாட்டுத் திட்டத்தின் (PDAP) முன்னேற்றம் மற்றும் பாராளுமன்ற முறைமை தொடர்பில் இதன்போது சுமுகமான கலந்துரையாடல் இடம்பெற்றது.

அத்துடன், பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்  (வைத்தியகலாநிதி) சுதர்ஷினி பர்னாந்து புல்லேவை இதற்கு முன்னர் சந்தித்ததாகத் குறிப்பிட்ட அவர் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்படும் பணிகள் தொடர்பில் அவர் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

மேலும், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவுடனும் Marc-André Franche அவர்கள் கலந்துரையாடல் நடத்தியதுடன், இதன்போது பாராளுமன்றக் குழு முறைமை மற்றும் துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்கு இளைஞர் பிரதிநிகளை இணைத்துக்கொள்ளல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் சட்டவாக்க செயன்முறையில் குழு முறைமை ஊடாக சிவில் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர்கள் மற்றும் நிபுணர்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வது தொடர்பிலும் இதன்போது செயலாளர் நாயகம் விளக்கமளித்தார்.

மேலும், தேர்தல் காலங்களில் செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்துவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், பாராளுமன்ற செயற்பாடுகளுக்குத் தேவையான ஆதரவுகளை தொடர்ந்தும் வழங்குவதாக Marc-André Franche உறுதியளித்தார்.