முடிவுக்கு வந்த இரட்டை இலை விவகாரம்: அதிமுகவுக்கு ஒதுக்கி அறிவிக்கை

23 0

அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது.’மக்களவைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டி. சின்னத்தை பெறுவது எப்படி என்பது பரம ரகசியம்’ என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.

தேர்தல் ஆணைய தரவுகளின்படி, தான், இன்னும் அதிமுக ஒருங்கிணைப்பாளராக நீடிப்பதால், இரட்டை இலை சின்னத்தை மக்களவைத் தேர்தலில் வேட்பாளர்களுக்கு ஒதுக்க கோரும் அதிகாரத்தை தனக்குவழங்க வேண்டும்.இல்லாவிட்டால் எனக்கும், பழனிசாமிக்கும் தனி சின்னம் ஒதுக்க வேண்டும் என்று பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்காமல் இருந்து வந்தது. பன்னீர்செல்வம் தரப்பில் வா.புகழேந்தி, இரட்டை இலை சின்னத்தை முடக்குமாறு தேர்தல் ஆணையத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

ராம்குமார் ஆதித்தன் தரப்பில், அதிமுக பொதுக்குழு, பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது தொடர்பான வழக்குகள் சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், மக்களவை தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை வேட்பாளருக்கு ஒதுக்க கோரும் அதிகாரத்தை அதிமுக அவைத் தலைவருக்கு வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர், பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால், இரட்டை இலை சின்னத்தை யாருக்கும் ஒதுக்க கூடாது என தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கிடையில் ராம்குமார் ஆதித்தன் தொடர்ந்த வழக்கில், இரட்டை இலை சின்னம் கோரும் அதிகாரம் பழனிசாமிக்கு தான் உள்ளது என டெல்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், மாநிலவாரியாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு தொடர்பான அறிவிக்கையை தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது. அதில் திமுகவுக்கு உதயசூரியன், தேமுதிகவுக்கு முரசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு சோளம் மற்றும் அரிவாள் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், அதிமுகவின் கட்சி அலுவலக முகவரி, அவ்வை சண்முகம் சாலை, ராயப்பேட்டை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இரட்டை இலை சின்னத்தை கோரும் அதிகாரம் பழனிசாமிக்கு மட்டுமே இருப்பதும், அதற்கு எந்த தடையும் இல்லை என்பதும், இரட்டை இலை சின்னம் தொடர்பாக பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அளித்த மனுக்கள் அனைத்தும் கருத்தில் கொள்ளப்படவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.