கம்பம் அருகே நிதி நிறுவன அதிபர் வீட்டில் வருமான வரி சோதனை

18 0

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் கர்ணன் (வயது70). இவர் கே.கே.பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிதி நிறுவனங்கள் நடத்தி வருகிறார். மேலும் நிலக்கிழாராகவும் உள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு மதுரையில் இருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் கர்ணன் வீடு மற்றும் கம்பத்தில் உள்ள அவரது அலுவலகங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இரவு தொடங்கிய இந்த சோதனை விடிய விடிய நடந்த நிலையில் இன்று காலை வரை நீடித்தது. பின்னர் முக்கிய ஆவணங்களை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.இதனால் அப்பகுதியில் கர்ணனின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர். போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் வேட்பாளர்கள் இதுபோன்று நிதி நிறுவனங்களில் அதிக அளவு பணம் பெற்று பயன்படுத்தி வருவதாக வந்த புகாரின் பேரில் சோதனை நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.நேற்று போடி அருகே தேர்தல் பறக்கும் அதிகாரிகள் கோடாங்கிபட்டி அருகே சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது தேனியில் இருந்து போடிக்கு வந்த தனியார் வாடகை வாகனத்தை சோதனை செய்தனர். அதில் இருந்த ஒரு சூட்கேசில் ரூ.20 லட்சம் இருந்தது. இது குறித்து விசாரித்தபோது ஏ.டி.எம்.மில் நிரப்புவதற்காக கொண்டு சென்றதாக அவர்கள் தெரிவித்தனர்.ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.20 லட்சத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.