வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன முன்னாள் தலைவருக்கு சிறைத்தண்டனை விதிக்க கோரிக்கை

22 0

ஸ்பானிய கால்பந்தாட்ட வீராங்கனை ஜெனி ஹேர்மோசோவை உதட்டில் முத்தமிட்ட அந்நாட்டு கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் லூயிஸ் ரூபியாலெஸுக்கு இரண்டரை வருட சிறைத்தண்டனை வழங்க வேண்டும் என ஸ்பானிய வழக்குத்தொடுநர்கள் கோரியுள்ளனர்.

கடந்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்றஇ மகளிர் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஸ்பானிய அணி வென்ற பின்னர், மைதானத்தில் வைத்து, அவ்வணி வீராங்கனை ஜெனி ஹேர்மோசோவின் உதட்டில் லூயிஸ் ரூபியாலெஸ் முத்தமிட்டமை சர்ச்சையை ஏற்படுத்தியது.

வீராங்கனைகளின் போராட்டத்தையடுத்து, சம்மேளனத்தின் தலைவர் பதவியிலிருந்து ரூபியாலெஸ் விலகினார். அவர் 3 வருடங்கள் கால்பந்தாட்டச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு பீபா தடை விதித்துள்ளது.

அதேவேளை, வீராங்கனையை முறையற்ற வகையில் முத்தமிட்ட சம்பவம் தொடர்பில் ரூபியாலெஸுக்கு எதிராக ஸ்பானிய அதிகாரிகள் வழக்குத் தொடுத்துள்ளனர்.

இவ்வழக்கில் ரூபியாலெஸுக்கு இரண்டரை வ ருட சிறைத்தண்டனை விதிக்க வேண்டும் எனவும் வீராங்கனை ஜெனிக்கு 50,000 யூரோ இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் வழக்குத்தொடுநர்கள் கோரியுள்ளனர்.