வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற நடமாடும் சேவை சரியான ஒழுங்குபடுத்தல் இல்லாத காரணத்தால் குழப்படைந்தது.
வவுனியாவில் மாவட்ட செயலகத்தின் வழிகாட்டலுடன் வவுனியா பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட “நில மெகவர” ஜனாதிபதியின் தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இன்று வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் நடமாடும் சேவை ஒன்று பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக நடத்தப்பட்டது.
இந் நடமாடும் சேவையில் வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களைச் சேர்ந்த பொது மக்கள் அடையாள அட்டை, பிறப்பு, விவாக மற்றும் மரணச் சான்றிதழ்கள், சாரதி அனுமதி பத்திரம், ஒய்வூதிய திணைக்கள சேவைகள், வீட்டுக் கடன் பெற்றுக்கொள்ளல், முதியோர் அட்டைகள் பெற்றுக்கொள்ளல், காணி உரிமம், வேலைவாய்ப்பு, சமூர்த்தி ஓய்வூதிய கொடுப்பனவு உள்ளிட்ட சேவைகளை பெற்றுக்கொள்ள வருகைதந்திருந்தனர்
நடமாடும் சேவை நடைபெறும் இடத்தில் பெருமளவான மக்கள் நீண்ட வரிசையில் கொழுத்தும் வெய்யிலில் தங்கள் தேவைகளை நிறைவேற்ற காத்திருந்தனர்.
இதன்போது வயதானவர்கள், சிறுவர்கள் மக்கள் நெரிசலில் தத்தளித்த நிலையில் கூட்டத்தில் சிக்கிய இரண்டு குழந்தைகளை ஊடகவியலாளர்கள் காப்பாற்றி அவர்களின் பெற்றோர்களிடத்தில் ஒப்படைத்த சம்பவமும் இடம்பெற்றது.
நடமாடும் சேவை நடைபெற்ற இடத்தில் ஒழுங்குபடுத்தல் சரியாக இல்லாத நிலையில், அதிகாரிகளால் மக்களின் ஆவணங்களை சரிபார்க்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
அதிகாரிகள் சேவை வழங்கிய மேசை கதிரை போன்ற தளபாடங்கள் தள்ளி விழுத்தப்பட்ட நிலையில் பொலிசாரால் ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டதுடன் மக்கள் முண்டியடித்ததன் காரணமாக பாடசாலையின் பிரதான வாயில் இழுத்து மூடப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இச்சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர் வவுனியா உதவி பிரதேச செயலாளர் திருமதி சாரதா கர்ணனிடம் விளக்கம் கேட்டபோது மக்களுக்கான அனைத்து ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் மக்கள் முண்டியடிப்பதன் காரணமாக நிலைமையை சமாளிக்க முடியாதுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நடமாடும் சேவையானது ஒரு ஒழுங்குபடுத்தல் இல்லாத நிலை காணப்படுவதாகவும் தாங்கள் ஏமாற்றத்துடன் வீடு செல்வதாகவும் மக்கள் தெரிவித்தனர்.
மக்களை ஏமாற்றும் நடவடிக்கையாகவே இந்த நடமாடும் சேவையை பார்ப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

