ரிமோட்டால் டிவியை அடித்தது ஏன்? – கமல்ஹாசன் விளக்கம்

21 0

இண்டியா கூட்டணியை ஆதரித்து மார்ச் 29-ம் தேதி முதல் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக மநீம தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் விடுதியில், மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுக்கான தேர்தல் பிரச்சார வழிகாட்டுதல் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்து கட்சித் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது: ரிமோட் எடுத்து டிவியில் அடித்தவர் தானே அங்கு செல்கிறார் என கூறினார்கள். நம் வீட்டு ரிமோட், நம் வீட்டு டிவி, ஆனால் டிவிக்கான மின்சாரத்தையும், ரிமோட்டுக்கான ஒரு பேட்டரியையும் எடுக்க பார்க்கும் ஒரு சக்தி மத்தியில் உருவாகிக் கொண்டிருக்கிறது.காந்தி இறக்கவில்லை. மதச்சார்பற்ற இந்தியாவுக்காக குண்டு ஏந்தி இறந்தார். அத்தகைய மதச்சார்பற்றஇந்தியாவுக்காக தான் நான் தேர்தலில் போட்டியிடவில்லை. இது தியாகமல்ல, இது ஒரு வியூகம்.அனைத்து இடங்களிலும் ஓடி ஓடி பிரச்சாரம் செய்வதை விட தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சில இடங்களை திமுகவுடன் ஆலோசித்து தேர்வு செய்துள்ளோம்.

அதன்படி, மார்ச் 29-ம் தேதி ஈரோட்டில் தொடங்கி, 30-ல் சேலம், ஏப்.2-ல் திருச்சி, 3-ல் சிதம்பரம், 6-ல் பெரும்புதூர், சென்னை, 7-ல் சென்னை, 10-ல் மதுரை, 11-ல் தூத்துக்குடி, 14-ல் திருப்பூர், 15-ல் கோவை, 16-ல்பொள்ளாச்சியில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளேன். இங்கு வரலாறு காணாத அளவில் மக்கள் திரள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

முதல்கட்டமாக தொகுதிவாரியாக தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்துள்ளார். நிகழ்வில், கட்சியின் பொதுச்செயலாளர் ஆ.அருணாச்சலம், துணைத் தலைவர்கள் ஏ.ஜி.மவுரியா, ஆர்.தங்கவேலு, செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.