பொதுமக்கள் தங்கள் பகுதியில் காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளை இணையதளத்தில் தெரிவிக்கலாம்

19 0

பொதுமக்கள் தங்கள் பகுதியில் காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளை இணையதளத்தில் தெரிவிக்கலாம் என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தொற்றுநோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக ஒருங்கிணைந்த சுகாதார இணையதளம், ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்ட இணையதளங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளன. சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனையின் வாயிலாக பெறப்பட்ட தொற்றுநோய் குறித்த தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு, மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டு தொற்றுநோய் பரவல் தடுக்கப்படுகிறது.

இந்நிலையில், பொதுமக்களே நேரடியாக தெரிவிக்கும் வகையிலான இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறுகையில், “பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் காய்ச்சல், இருமல், சளி, வயிற்றுப்போக்கு, தோலில் ஏற்படும் கொப்பளங்கள், அம்மை நோய்கள், மஞ்சள் காமாலை வெறிநாய் கடி போன்ற தகவல்களை தெரிவிக்கலாம்.

இதற்காக, https://ihip.mohfw.gov.in/cbs/#!/ என்ற இணையதளத்தில் பெயர், தொலைபேசி எண், வயது, வேலை, கிராமம், மாவட்டம், மாநிலம், நிகழ்வு நடந்த நாள், இடம் மற்றும் தொற்றுநோய் குறித்த விவரம் பதிவு செய்ய வேண்டும். இதன் மூலமாக சம்பந்தப்பட்ட பகுதியில், சுகாதாரத்துறை விரைந்து கள ஆய்வு செய்து, நோய் பரவலை தடுப்பர். எனவே, இந்த இணையதள வசதியை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்” என்றார்.

இதனிடையே சின்னம்மை, தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க 3.81 லட்சத்துக்கும் அதிகமான வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.