தினகரனுக்கு தேனி தொகுதியை ஓபிஎஸ் ‘விட்டுக் கொடுத்தது’ ஏன்?

30 0

“தினகரனின் விருப்பத்துக்கு இணங்க, நன்றி கடனாக தேனி தொகுதியை அவருக்கு விட்டுக் கொடுத்து இருக்கிறோம்” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

பாஜக கூட்டணியில் அமமுக சார்பில் தேனி மக்களவைத் தொகுதியில் டிடிவி தினகரனும், திருச்சி மக்களவைத் தொகுதியில் செந்தில்நாதனும் போட்டியிடுவதாக அதிகாரபூர்வமாக ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாச பட்டியில் உள்ள பண்ணை வீட்டில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.அந்தக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, “வரும் தேர்தலில் தொண்டர்களை களம் இறக்கினால் அவர்களுக்கு பொருளாதார பாதிப்புகளும், பல்வேறு சோதனைகளும் ஏற்படும். தொண்டர்களை சோதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்பதற்காகத்தான், இந்த மாபெரும் பொறுப்பை ஏற்று இத்தேர்தலில் நானே போட்டியிடுகிறேன். நான் எங்கு போட்டியிட வேண்டும் என்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வந்தேன். நீதி கேட்க ராமநாதபுரம்தான் சரியான தொகுதி என்று முடிவு செய்தேன். சரியான தீர்ப்பை அவர்களால்தான் தர முடியும் என்பதால் அங்கு போட்டியிடுகிறேன்.

அதிமுக உண்மை தொண்டர்களின் உரிமையை காக்கும் இந்த போராட்டம் வெற்றியடைந்து அது ஒரு சக்தியாக ராமநாதபுரத்தில் வெளிப்படும். நான் ராமநாதபுரம் சென்றாலும் என் இதயம் தேனியில் தான் இருக்கும். தேனியில் நான் போட்டியிட வேண்டும் என்று நிர்வாகிகளும், தொண்டர்களும் விரும்பினர். அதேவேளையில், தினகரனின் விருப்பத்துக்கு இணங்க நன்றி கடனாக தேனி தொகுதியை அவருக்கு விட்டுக் கொடுத்து இருக்கிறோம்” என்றார் ஓபிஎஸ்.

தேனி மக்களவைத் தொகுதி ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி), போடி, கம்பம் மற்றும் மதுரை மாவட்டத்தின் சோழவந்தான் (தனி), உசிலம்பட்டி ஆகிய தொகுதிகளை உள்ளடக்கி உள்ளது. அமமுக சார்பில் டிடிவி தினகரன் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகள் ஏற்கெனவே மும்முரமாக நடந்து வந்தன. இதற்காக தொகுதி முழுவதும் தேர்தல் பணியில் அக்கட்சியினர் தீவிரம் காட்டி வந்தனர். கட்சி அலுவலகங்கள், தேர்தல் பணிக்கான பங்களாக்கள், வீடுகள் உள்ளிட்டவற்றை தேர்வு செய்வதற்கான பணி நடந்து வந்தது.

“தேனி தொகுதியில் டிடிவி தினகரனுக்கு நல்ல அறிமுகம் உண்டு. 1999-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். 2004-ம் ஆண்டிலும் இங்கு போட்டியிட்டுள்ளார். இவர் சார்ந்த சமுதாய வாக்குகளும் அதிகம். அதனால் இங்கு போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது” என்று அமமுகவினர் தெரிவித்தனர்.

இதனிடையே, “தேனியில் டிடிவி தினகரன் போட்டியிட்டால் களத்தில் சந்திக்க தயார்” என்று தேனி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.