நாம் தமிழர் கட்சியின் 40 வேட்பாளர்கள் அறிமுகம் – சீமான் இயக்கிய பிரச்சார விளம்பரம்!

24 0

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் 40 வேட்பாளர்களை, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார்.

மக்களவைத் தேர்தலையொட்டி நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் 40 வேட்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டம் சென்னை கோவிலம்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கி, மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ள 40 வேட்பாளர்களையும் ஒருசேர மேடையில் ஏற்றி அறிமுகப்படுத்தினார். அதன்படி தலா 20 பெண் வேட்பாளர்கள், 20 ஆண் வேட்பாளர்கள் சரி சமமாக நாம் தமிழர் கட்சியின் சார்பாக வரும் மக்களவைத் தேர்தலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.இதில் 16 மருத்துவர்கள், 6 பொறியாளர்கள், 7 ஆசிரியர்களும் அடங்குவர். இது தவிர கல்வியாளர், முனைவர், தொழில்முனை வோர்களும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்த பின்னர் பொதுக் கூட்டத்தில் சீமான் பேசுகையில், “தேர்தலுக்கான கட்சியின் சின்னமே என்னவென்று தெரியாமல் வேட்பாளர்களை அறிவிக்க வந்துவிட்டான் என்று விமர்சிக்கின்றனர். என் மக்கள் என் சின்னத்தை தேட மாட்டார்கள்.

என் எண்ணத்தை தான் தேடுவார்கள். சின்னம் வைத்திருக்கும் கட்சிகளை காட்டிலும், சின்னம் எதுவென்றே தெரியாத நாம் தமிழர் கட்சி துடிப்போடு களத்தில் நிற்கிறது. கூட்டணி இல்லாமல் எப்படி தேர்தலில் வெல்வீர்கள் என்று நினைக்கின்றனர். கூட்டணி வைத்தும் தோல்வியுற்றவர்களை என்ன செய்வது? 40 தொகுதியிலும் தனித்து போட்டியிடும் துணிவு நாம் தமிழர் கட்சிக்கு மட்டும் தான் உண்டு” இவ்வாறு அவர் பேசினார்.

நாம் தமிழர் கட்சியின் தொகுதி வாரியான வேட்பாளர்கள்: மு.ஜெகதீஷ் சந்தர் ( திருவள்ளூர் ), அமுதினி ( வட சென்னை ), சு.தமிழ்ச்செல்வி ( தென் சென்னை ), இரா.கார்த்திகேயன் ( மத்திய சென்னை ), வெ.ரவிச்சந்திரன் ( திருப்பெரும்புதூர் ), வி.சந்தோஷ்குமார் ( காஞ்சிபுரம் ), அப்சியா நஸ்ரின் ( அரக்கோணம் ), தி.மகேஷ்குமார் ( வேலூர் ),

வீரப்பனின் மகள் வித்யாராணி வீரப்பன் ( கிருஷ்ணகிரி ), அபிநயா பொன்னிவளவன் ( தர்மபுரி ), இரா.ரமேஷ்பாபு ( திருவண்ணாமலை ), கு.பாக்கியலட்சுமி ( ஆரணி ), மு.களஞ்சியம் ( விழுப்புரம் ), ஆ.ஜெகதீசன் ( கள்ளக்குறிச்சி ), க.மனோஜ் குமார் ( சேலம் ), க.கனிமொழி ( நாமக்கல் ), மு.கார்மேகன் ( ஈரோடு ), மா.கி.சீதாலட்சுமி ( திருப்பூர் ), ஆ.ஜெயக்குமார் ( நீலகிரி ), ம.கலாமணி ஜெகநாதன் ( கோவை ), நா.சுரேஷ்குமார் ( பொள்ளாச்சி ), கயிலை ராஜன் ( திண்டுக்கல் ), ரெ.கருப்பையா ( கரூர் ),

ஜல்லிக்கட்டு ராஜேஷ் ( திருச்சி ), இரா.தேன்மொழி ( பெரம்பலூர் ), வே.மணிவாசகன் ( கடலூர் ), இரா.ஜான்சிராணி ( சிதம்பரம் ), பி.காளியம்மாள் ( மயிலாடுதுறை ), மு.கார்த்திகா ( நாகப்பட்டினம் ), ஹூமாயூன் கபீர் ( தஞ்சாவூர் ), வி.எழிலரசி ( சிவகங்கை ), மோ.சத்யாதேவி ( மதுரை ), மதன் ஜெயபாலன் ( தேனி ), சி.கவுசிக் ( விருதுநகர் ), சந்திர பிரபா ஜெயபால் ( ராமநாதபுரம் ),

ரொவினா ரூத் ஜேன் ( தூத்துக்குடி ), சி.ச.இசை மதி வாணன் ( தென்காசி ), பா.சத்யா ( திருநெல்வேலி ), மரிய ஜெனிபர் ( கன்னியாகுமரி ), இரா.மேனகா ( புதுச்சேரி ) இது தவிர விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்கு இரா.ஜெமினி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே ’மைக்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கியிருந்த நிலையில், அதனை ஏற்காமல் சின்னமின்றி வேட்பாளர்களை சீமான் அறிமுகப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சீமான் இயக்கிய பிரச்சார விளம்பரம்: சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் நாம் தமிழர் கட்சிக்கான தேர்தல் பிரச்சார விளம்பரத்தை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானே இயக்கியுள்ளார். போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரையும் தேர்தல் விளம்பரத்தில் நடிக்க வைத்திருக்கிறார் சீமான்.

தொகுதி வாரியாக ஒவ்வொரு வேட்பாளரையும் தனியாக நிற்க வைத்து வசனங்களை பேச வைத்து சீமான் விளம்பரப் படத்தை இயக்கி முடித்தார். இந்த விளம்பரங்களை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரப்பிடவும், பிரச்சாரத்தின் போது டிஜிட்டல் திரையில் ஒளிபரப்பு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.