காயங்களுக்கு மருந்திடக்கூடிய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபியுங்கள்

27 0

லங்கையில் உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள்நிகழாமை என்பவற்றை உறுதிப்படுத்துவதை இலக்காகக் கொண்டு, சிதிலமடைந்த மக்களின் காயங்களுக்கு மருந்திடக்கூடியதும், அனைவரையும் ஒன்றிணைக்கக்கூடியதுமான வகையில் ‘உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு’ ஒன்றை ஸ்தாபிப்பதே முன்நோக்கிப் பயணிப்பதற்கான வழியாக அமையும் என நீதியரசர் நவாஸ் தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேவேளை இச்செயன்முறைகள் தொடர்பில் தாம் கொண்டிருக்கும் உண்மையான தன்முனைப்பை நிரூபிக்கக்கூடிய வகையில் ‘நிலைமாறுகால நீதி தொடர்பான உயர் அதிகாரமுடைய சர்வதேச ஆலோசனை கவுன்சிலை’ அரசாங்கம் உருவாக்கவேண்டும் எனவும் அவ்வறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் மேம்பாடு தொடர்பான முன்னைய ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆராய்தல், புலனாய்வு செய்தல், அறிக்கையிடல் மற்றும் அவசியமான முன்மொழிவுகளைச் செய்தல் ஆகியவற்றுக்காக உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி.நவாஸ் தலைமையில் ஓய்வுபெற்ற பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்னாந்து, ஓய்வுபெற்ற மாவட்டச் செயலாளர் நிமல் அபேசிறி மற்றும் யாழ். நகர முன்னாள் மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆகிய மூவரடங்கிய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டது.

அந்த ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச கட்டமைப்புக்களின் பிரதிநிதிகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகள், முன்னாள் போராளிகள், பாதிக்கப்பட்ட தரப்பினர் உள்ளடங்கலாகப் பலதரப்பட்ட தரப்பினர் ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியமளித்திருந்தனர். அதன்படி ஆணைக்குழுவின் 2 இடைக்கால அறிக்கைகள் ஏற்கனவே ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டிருந்த நிலையில், 623 பக்கங்களைக் கொண்ட அதன் இறுதி அறிக்கையின் முதல் பாகம் எமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது.

அவ்வறிக்கையில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தொடர்பான அறிமுகம், முன்னைய ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்கள் தொடர்பான விபரங்கள், முன்னைய விசாரணை ஆணைக்குழுக்களால் கண்டறியப்பட்ட விடயங்களும் அவற்றின் பரிந்துரைகளும், இந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள், அவ்விசாரணைகள் மூலம் கண்டறியப்பட்ட விடயங்கள், இந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகள் ஆகிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட முக்கிய விடயங்கள் வருமாறு:

சாட்சியங்கள்

யாழ்ப்பாணத்தில் 45 பேரும், கிளிநொச்சியில் 31 பேரும் எமது ஆணைக்குழுவில் சாட்சியமளித்தனர். அவர்களது சாட்சியங்கள் 2009ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்னரான காலப்பகுதியில் இடம்பெற்ற கடத்தல்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்படல்கள் பற்றிய குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கியிருந்தன. அவர்களில் சிலர் இராணுவம், கடற்படை மற்றும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட கடத்தல்கள் தொடர்பில் குறிப்பிட்டதுடன், ஏனையோர் கடத்தல் சம்பவங்களுக்குக் காரணமென தமிழீழ விடுதலைப்புலிகளைக் குற்றஞ்சாட்டினர்.

இந்த சாட்சியாளர்களில் ஒரு தரப்பினர் தமது பிள்ளைகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களை விடுதலைப்புலிகள் வலுக்கட்டாயமாக இயக்கத்தில் இணைத்துக்கொண்டதாகவும், அது அவர்களது (குடும்ப உறுப்பினர்கள்) மரணம் அல்லது காணாமல்போதலுக்கு வழிவகுத்ததாகவும் குற்றஞ்சாட்டினர். அதேபோன்று முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தாம் 1990இல் விடுதலைப்புலிகளால் வலுக்கட்டாயமாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, புத்தளம் போன்ற ஏனைய பகுதிகளுக்கு அகதிகளாகச் சென்றமை தொடர்பில் சாட்சியமளித்தனர்.

யாழ்ப்பாணத்தில் சாட்சியமளித்த முஸ்லிம்கள் நியாயமான காணி வழங்கல் குறித்து வலியுறுத்திய அதேவேளை, ஏனையோர் இழப்பீடு, வீடமைப்பு, பொருளாதார உதவிகள் பற்றிப் பேசினர். மேலும் சிலர் தாம் இழந்த தமது அன்புக்குரியவர்களின் மீள்வருகையைக் கோரினர்.

கிளிநொச்சியில் சாட்சியமளித்தோரில் பெரும்பான்மையானோர் படுகொலைகள் அல்லது கடத்தல்கள் குறித்து சுட்டிக்காட்டியதுடன், காணாமலாக்கப்படல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணையை வலியுறுத்தினர். காத்தான்குடியில் சாட்சியமளித்தோர் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அட்டூழியங்கள் பற்றி முறைப்பாடளித்ததுடன், பெரும் எண்ணிக்கையான பெண்கள் விடுதலைப்புலிகளால் தமது குடும்ப உறுப்பினர்கள் காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் ஆதாரங்களை சமர்ப்பித்தனர்.

மேலும் கொழும்பில் நடத்தப்பட்ட விசாரணைகளில் முன்னாள் போராளிகள், மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் (முன்னாள்) சந்திம விக்ரமசிங்க, இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் தவிசாளர் டாரா விஜேதிலக, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் தீப்தி லமாஹேவா, சட்டத்துறை பேராசிரியர் சர்வேஸ்வரன் அருளானந்தம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் பேராசிரியர் பிரதிபா மஹநாமஹேவா, தேசிய சமாதானப் பேரவையின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஜெஹான் பெரேரா, முன்னாள் வெளியுறவு செயலாளர் எச்.எம்.ஜி.எஸ்.பலிஹக்கார, முன்னாள் ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ, இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் எஸ்.ஈ.ஸ்கால்க் ஆகியோர் சாட்சியமளித்திருந்தனர். (அவர்களது சாட்சியங்கள் பற்றி அறிக்கையில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது)

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு பரிந்துரைக்கும் தீர்வு

இலங்கையில் உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள்நிகழாமை ஆகியவற்றை உறுதிப்படுத்துவதை இலக்காகக் கொண்டதொரு பொறுப்புக்கூறல் பொறிமுறையாக ‘உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு’ ஒன்றை நிறுவுவதே முன்நோக்கிப் பயணிப்பதற்கான வழியாகும். எமது ஆணைக்குழுவினால் முன்மொழியப்பட்ட (இடைக்கால அறிக்கையில்) உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரையை நடைமுறைப்படுத்தும் விதமாக உரிய அமைச்சர்களால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை தொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்திகள் மூலம் நாம் அறிந்திருக்கின்றோம். அந்த ஆணைக்குழு சிதிலமடைந்த மக்களின் காயங்களுக்கு மருந்திடக்கூடிய வகையிலும், எம் அனைவரையும் ஒன்றிணைக்கக்கூடிய விதத்திலும் அமையவேண்டும்.

கடந்த கால ஆணைக்குழுக்களின் பணி மற்றும் அவற்றின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் முன்னேற்றம் எட்டப்படாமையானது ஆணைக்குழுக்களின் நம்பகத்தன்மை தொடர்பில் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது. எனவே, மனித உரிமைகள் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதும், புதிதாக ஸ்தாபிக்கப்படும் உண்மையைக் கண்டறியும் பொறிமுறையானது அவ்வாறான கட்டமைப்புக்களின் நம்பகத்தன்மையை மீளுறுதிப்படுத்தும் விதத்தில் அமைவதும் இன்றியமையாததாகும்.

அதேபோன்று உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பில் வரலாற்று ரீதியான ஆவணப்படுத்தலை மேற்கொள்ளவும், சட்ட கட்டமைப்பு மறுசீரமைப்புக்களில் ஆதிக்கம் செலுத்தவும், மனித உரிமைகளை பாதுகாத்து மேம்படுத்தவும் முடியும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

உத்தேச உண்மை, நல்லிணக்க ஆணைக்குழு உருவாக்கம்

உத்தேச ஆணைக்குழு தொடர்பில் தகுதி வாய்ந்த தரப்பினரால் நடைமுறைச் சாத்தியமான காலஎல்லையை உள்ளடக்கி மதிப்பீட்டு செயன்முறையொன்று தயாரிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு அப்பால் வட, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களையும் உள்வாங்கக்கூடிய விதத்தில் அவர்களுடனும் விரிவான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவேண்டும்.

நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், குற்றவியல் நீதி, இழப்பீடு, காணாமல்போனோர் விவகாரம் ஆகியவற்றை கையாள்தல் தொடர்பில் அறிவதற்காக வினாக்கொத்துக்கள் தயாரிக்கப்படவேண்டும். இச்செயன்முறை குறித்து பாதுகாப்புப்படையினர் மற்றும் பொலிஸார், காணாமல்போனோரின் குடும்பங்கள், பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், போர் விதவைகள், அரச சேவையாளர்கள், மதத்தலைவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், அரசியல் தலைவர்கள், அரசியல் கட்சி உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், இளைஞர், யுவதிகள், புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கப் போராளிகள், விசேட தேவையுடையோர், காயமடைந்தோர் உள்ளடங்கலாக விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களில் போரினால் பாதிக்கப்பட்டோர், மாநகர சபை மற்றும் மாகாண சபை மட்ட அரசியல்வாதிகள், பெண்கள் மற்றும் சிறுவர்கள், பொதுமக்கள், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், தொழிற்சங்கவாதிகள் மற்றும் புத்திஜீவிகள் ஆகிய தரப்பினருடன் விரிவான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவேண்டும்.

ஆணைக்குழு உறுப்பினர் தெரிவு

இவ்விவகாரத்துடன் தொடர்புடைய துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களாகவும், சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடியவர்களாகவும், பாலின சமத்துவத்தை உறுதிசெய்யும் வகையிலும் ஆணைக்குழு உறுப்பினர் நியமனம் இடம்பெறவேண்டும்.

பெண்கள் பிரதிநிதித்துவத்தை ஊக்குவித்தல்

உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ஆணையாளர்களின் பெண்கள் உள்வாங்கப்பட வேண்டும் என வலுவாகப் பிரேரிக்கின்றோம். ஏனெனில், பாதிக்கப்பட்ட பெண் சாட்சியாளர்கள் பெண்கள் அங்கத்துவம் வகிக்கும் ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிப்பதை சௌகரியமாக உணர்வார்கள். அதுமாத்திரமன்றி இதன் மூலம் சமாதானத்தைக் கட்டியெழுப்பல், மோதல் தடுப்பு, மோதலுக்கான தீர்வு மற்றும் தீர்மானம் மேற்கொள்ளல் ஆகியவற்றில் பெண்கள் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தமுடியும்.

ஆணைக்குழுவின் சுயாதீனத்தன்மை

உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சுயாதீனத் தன்மைக்கு சகல அரச கட்டமைப்புக்களும் மதிப்பளிக்கவேண்டும். ஆணைக்குழு அதன் நடவடிக்கைகளைப் பக்கச்சார்பின்றி, செயற்றிறன் மிக்க வகையில் முன்னெடுப்பதற்கு அக்கட்டமைப்புக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுத்தலானது ஆணைக்குழுவின் நிதியியல் பாதுகாப்பிலேயே தங்கியிருக்கும். ஆணையாளர்கள் ஆணைக்குழுவில் முழுநேரமாகப் பணியாற்ற வேண்டும். ஆணைக்குழு அதன் நடவடிக்கைகளை உரியவாறு முன்னெடுப்பதற்கு அவசியமான போதியளவு நிதியைக் கொண்டிருக்கவேண்டும்.

ஆணைக்குழுவின் அறிக்கை

உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகளும், அதன் இறுதி அறிக்கையும் அந்த ஆணைக்குழுவினால் கண்டறியப்பட்ட விடயங்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்யக்கூடிய வகையில் சர்வதேச தர நியமங்களுக்கு ஏற்றவாறு அமையவேண்டும்.

மோதலுக்கு அடிப்படையாக அமைந்த காரணிகளைக் களைந்து, நிலையான சமாதானத்துக்கு வித்திடக்கூடியவாறான அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட அரசியல் தீர்வு விடயத்தில் ஆணைக்குழு பரிந்துரைகளை முன்வைக்கலாம்.

ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதுடன், பொதுமக்களுக்குப் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.

சர்வதேச ஒத்துழைப்பு

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் வெற்றிகரமான இயங்குகையை உறுதிப்படுத்தும் பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கு மாத்திரமன்றி, சர்வதேச சமூகத்துக்கும் இருக்கிறது. ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை கண்காணித்தல் மட்டுமன்றி ஆணைக்குழுவுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்கல், அதன் இயலுமையை மேம்படுத்தல் ஆகிய உதவிகளை சர்வதேச சமூகம் வழங்க முடியும். அதேபோன்று உண்மையை கண்டறியும் பொறிமுறை தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதற்கு இரண்டு அல்லது மூன்று சர்வதேச ஆலோசகர்களை இலங்கை அரசாங்கம் விரைவாக நியமிக்க வேண்டும். குறிப்பாக, தாம் இந்நடவடிக்கைகளை உண்மையான அக்கறையுடனேயே முன்னெடுக்கின்றோம் என்பதை வெளிப்படுத்தும் வகையில் அரசாங்கம் ‘நிலைமாறுகால நீதி தொடர்பான உயர் அதிகாரமுடைய சர்வதேச ஆலோசனை கவுன்சிலை’ நியமிக்கவேண்டும்.