அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி: அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவிப்பு

24 0

இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அருணாச்சல பிரதேசம் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.

கடந்த 9, 10-ம் தேதிகளில் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் பிரதமர் நரேந்திர மோடி முகாமிட்டிருந்தார். அப்போது சீன எல்லையை ஒட்டிய பகுதியில் 13,000 அடி உயரத்தில் உலகின் மிக நீளமான இரு வழி சுரங்கப் பாதையை அவர் திறந்து வைத்தார். இந்த சுரங்கப் பாதை மூலம் சீன எல்லைப் பகுதிக்கு பிரம்மோஸ் உள்ளிட்ட ஏவுகணைகள், பீரங்கிகள், ராணுவ வாகனங்களை எளிதாக கொண்டு செல்ல முடியும்.

பிரதமர் மோடியின் அருணாச்சல பிரதேச சுற்றுப் பயணம் குறித்து கடந்த 11-ம் தேதி சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், பெய்ஜிங்கில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறும்போது, “சீனாவின் ஜாங்னான் (அருணாச்சல பிரதேசம்) பகுதியை இந்தியா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. அந்த பகுதி சீனாவுக்கு சொந்தமானது. அங்கு இந்தியா பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்ததை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஜாங்னானில் எந்தவொரு கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது” என்று தெரிவித்தார்.

இதற்கு இந்திய வெளியுறவுத் துறை அளித்த பதிலில், “இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அருணாச்சல பிரதேசம். எங்கள் நிலப்பரப்பில் எங்கள் மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து மேற்கொள்வோம். இந்திய நிலப்பகுதியை சீனா உரிமை கொண்டாடுவதை ஒருபோதும் ஏற்க முடியாது” என்று தெரிவிக்கப்பட்டது.

அருணாச்சல பிரதேச விவகாரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் நேற்று முன்தினம் கூறியதாவது:

இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அருணாச்சல பிரதேசம்.இதனை அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தை ராணுவ ரீதியாகவோ, வேறு எந்த வகையிலோ யாரேனும் ஆக்கிரமிக்க முயன்றால் அதனை அமெரிக்கா மிகக் கடுமையாக எதிர்க்கும்.

இந்திய பிசிபிக் பிராந்திய பகுதிகளை சீனா ஆக்கிரமிப்பதை தடுப்பது தொடர்பாக குவாட் கூட்டமைப்பு நாடுகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறோம். இதுதொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு வேதாந்த் படேல் தெரிவித்தார்.