தென்காசி தொகுதியில் தனி சின்னத்தில்தான் போட்டி: கிருஷ்ணசாமி உறுதி

23 0

தென்காசி தொகுதியில் தனி சின்னத்தில்தான் போட்டியிடுவோம். ஓரிரு நாட்களில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: கட்சி தொடங்கி 27 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இதுவரை 10-க்கும் மேற்பட்ட சட்டப்பேரவை, மக்களவைத் தொகுதிகளில் களம் கண்டுள்ளோம்.அனைத்து தேர்தல்களிலும், தேர்தல் ஆணையம் ஒதுக்கிய சிறப்பு சின்னத்திலேயே போட்டியிட்டுள்ளோம். 2019-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மட்டும் விதிவிலக்காக கூட்டணி சின்னத்தில் போட்டியிட்டோம்.

இந்த மக்களவைத் தேர்தலில் எங்களுக்கு தனி சின்னம் ஒதுக்கக் கோரி கடந்த பிப்ரவரி மாதத்திலேயே தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தோம். உரிய நடவடிக்கை எடுக்காததால், கடந்த 15-ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம்.

நாங்கள் கேட்டுள்ள டிவி சின்னத்தை ஒதுக்கித் தருமாறு, தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2011, 2014, 2021-ல் நடைபெற்ற தேர்தல்களில் டிவி சின்னத்தில்தான் போட்டியிட்டோம். எனவே, ஜனநாயக அடிப்படையில் டிவி சின்னத்தையே எங்களுக்கு ஒதுக்க வேண்டும்.

ஓரிரு நாட்களில் சின்னம் ஒதுக்கப்படும் என நம்புகிறோம். ஒருவேளை டிவி சின்னம் கிடைக்காமல், வேறு சின்னம் ஒதுக்கினாலும், அதில்தான் நாங்கள் போட்டியிடுவோம். எப்படியாயினும் தனி சின்னத்தில்தான் போட்டியிடுவோம். கூட்டணி சின்னத்தில் போட்டியிடமாட்டோம். இதில் எந்த குழப்பமும் இல்லை. இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.