இயக்குனர் சபை அனுமதியை அடுத்து 337 மில்லியன் டொலர் கடன்நிதி விடுவிக்கப்படுமென அறிவிப்பு

25 0

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் முன்னெடுக்கப்பட்டுவரும் மறுசீரமைப்பு செயன்முறைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாம் கட்ட மதிப்பீட்டு குறித்து உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாட்டை எட்டியிருக்கும் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழு, அதற்கு நாணய நிதிய இயக்குனர் சபையின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றதன் பின்னர் இலங்கைக்கு மேலும் 337 மில்லியன் டொலர் கடன்நிதி விடுவிக்கப்படுமென அறிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் 2.9 பில்லியன் டொலர் கடனை இலங்கைக்கு வழங்குவதற்கான முன்மொழிவுக்குக் கடந்த ஆண்டு மார்ச் 20 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை அனுமதியளித்தது.

அதனையடுத்து முதற்கட்டமாக 330 மில்லியன் டொலர் கடன்நிதி இலங்கைக்கு வழங்கப்பட்டதுடன், இரண்டாம் கட்டமாக 337 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு நாணய நிதியம் ஒப்புதல் அளித்தது.

 

இவ்வாறானதொரு பின்னணியில் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றுவதில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம், ஏனைய தொடர்புடைய துறையினரின் நிலைப்பாடுகள் என்பன உள்ளடங்கலாக இரண்டாம் கட்ட மதிப்பீட்டை மேற்கொள்ளும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டப்பிரதானி பீற்றர் ப்ரூவர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் நாட்டுக்கு வருகைதந்திருந்தனர்.

இக்காலப்பகுதியில் அவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ, தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், வர்த்தகத்துறைசார் பிரதிநிதிகள் உள்ளடங்கலாகப் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தனர்.

அதன்படி இலங்கை பற்றிய இரண்டாம் கட்ட மதிப்பீடு தொடர்பில் எட்டப்பட்டுள்ள இணக்கப்பாடு குறித்துத் தெளிவுபடுத்தும் நோக்கில் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளால் வியாழக்கிழமை (21) பி.ப 3.00 மணிக்கு கொழும்பிலுள்ள மத்திய வங்கியின் கேட்போர்கூடத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இச்சந்திப்பில் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டப்பிரதானி பீற்றர் ப்ரூவர், பிரதித்தலைவர் கற்ஸியரினா ஸ்விரிட்ஸென்கா, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி சர்வத் ஜஹான் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

அவர்களால் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்துக்களும், அவ்வதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் உள்ளடங்கியிருக்கும் விடயங்களும் வருமாறு:

இலங்கைக்கான 4 வருடகால விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தினால் அனுசரணையளிக்கப்படும் பொருளாதார மறுசீரமைப்பு செயன்முறை குறித்த இரண்டாம் கட்ட மதிப்பீடு தொடர்பில் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழுவினர் உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாட்டை எட்டியுள்ளனர்.

இந்த இணக்கப்பாட்டுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குனர் சபை ஒப்புதல் அளிக்கவேண்டியுள்ளது. அதற்கு விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் முன்கூட்டியே நிறைவேற்றுவதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நிபந்தனைகளை அரசாங்கம் பூர்த்திசெய்யவேண்டும்.

அத்தோடு கடன்மறுசீரமைப்பானது உரிய காலப்பகுதியில் முடிவுறுத்தப்படும் என்ற நம்பிக்கையை வழங்கக்கூடியவகையில் அதில் முன்னேற்றங்களை எட்டுவதுடன், நிதியியல் உத்தரவாதத்தை ஈடேற்றவேண்டும். அதற்கமைய இயக்குனர் சபையினால் ஒப்புதல் அளிக்கப்பட்டதன் பின்னர் இலங்கைக்கு 337 மில்லியன் டொலர் கடன்நிதி விடுவிக்கப்படுவதுடன், அதன்மூலம் இதுவரையில் இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன்நிதியின் பெறுமதி ஒரு பில்லியன் டொலர்களாக உயர்வடையும்.

இதுஇவ்வாறிருக்க விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின்கீழ் பணவீக்கத்தைக் குறைத்தல், சாதமான வெளிநாட்டுக்கையிருப்பு மட்டத்தைப் பேணல், நிதியியல் கட்டமைப்பு ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் அதேவேளை பொருளாதார வளர்ச்சிக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்படல் என்பன உள்ளடங்கலாக அவசியமான மறுசீரமைப்பு செயன்முறைகளை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை சிறந்த முன்னேற்றத்தைக் காண்பித்துள்ளது.

குறிப்பிடத்தக்களவிலான நிதியியல் மறுசீரமைப்புக்களைத் தொடர்ந்து பொதுநிதியியில் நிலை வலுப்படுத்தப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் பூர்த்திசெய்யப்படவேண்டிய நிபந்தனைகளில் எதிர்பார்க்கப்பட்ட சமூகப்பாதுகாப்பு செலவினங்கள் தவிர்ந்த ஏனைய சகல எண்கணிய நிபந்தனைகளும் சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

அதேபோன்று இவ்வாண்டு பெப்ரவரி மாத இறுதிக்குள் பூர்த்திசெய்யப்படவேண்டிய கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன அல்லது தாமதமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. சில துறைகள் சார்ந்த மறுசீரமைப்புக்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

அதேவேளை நாட்டின் பொருளாதார நிலைவரம் படிப்படியாக முன்னேற்றமடைந்துவருகின்றது. தொடர்ந்து 6 காலாண்டுகளாக பொருளாதாரச்சுருக்கம் பதிவாகிவந்த நிலையில், தற்போது அது மீண்டும் 1.6 சதவீதம் எனும் நேர்மறை பொருளாதார வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. அதுமாத்திரமன்றி 2023 இல் 3 ஆம் மற்றும் 4 ஆம் காலாண்டுகளில் ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியானது 4.5 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.

உற்பத்தி, கட்டுமானம் மற்றும் சேவை ஆகிய துறைகளிலும் தொடர் மீட்சி தென்படுகின்றது. 2022 செப்டெம்பரில் 70 சதவீதம் எனும் மிக உயர்ந்த மட்டத்திலிருந்த பணவீக்கம் 2024 பெப்ரவரியில் 5.9 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாத இறுதியில் மொத்த வெளிநாட்டுக்கையிருப்புக்களின் பெறுமதி 4.5 பில்லியன் டொலர்களாக உயர்வடைந்துள்ளது.

தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் மறுசீரமைப்புக்களைத் தொடர்ந்து பேணுவதானது நாட்டின் பொருளாதாரத்தை நிலைபேறான மீட்சிப்பாதையில் கொண்டுசெல்வதற்கும், அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை அடைந்துகொள்வதற்கும் இன்றியமையாததாகும். நிதியியல் மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதில் அரசாங்கம் கொண்டிருக்கும் அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டை நாம் வரவேற்கின்றோம்.

இருப்பினும் 2025 ஆம் ஆண்டு மற்றும் அதற்கு அப்பால் எதிர்பார்க்கப்படும் வருமான இலக்கை அடைந்துகொள்வதற்கு ஏனைய வருமானத்திரட்டல் நடவடிக்கைகளுடன் இணைந்ததாக சொத்துவரியை அறிமுகம் செய்வதில் முன்னேற்றத்தை எட்டுவது அவசியமாகும். வரி திரட்டலை ஊக்குவிக்கும் வகையில் வருமான முகாமைத்துவம் மற்றும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதும் மிகமுக்கியமானதாகும். அதேபோன்று எரிபொருள் மற்றும் மின்சாரம் ஆகியவற்றுக்கு செலவின அடிப்படையிலான விலையிடல் முறைமையைப் பேணுவதானது அரசுக்குச் சொந்தமான கட்டமைப்புக்கள் வாயிலாக நிதியியல் அச்சுறுத்தல் நிலை தோற்றம்பெறுவதற்கான வாய்ப்புக்களை குறைக்க உதவும்.

மேலும் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் உத்தியோகபூர்வ கடன்வழங்குனர் குழுவுடனும், சீன ஏற்றுமதி – இறக்குமதி வங்கியுடனும் இணக்கப்பாடு எட்டப்பட்டிருப்பதானது நாட்டின் கடன் நிலைவரத்தை ஸ்திரமான பாதையில் கொண்டுசெல்வதை இலக்காகக்கொண்டு எட்டப்பட்ட முக்கிய மைல்கல்லாகும். இதற்கு அடுத்தகட்டமாக உத்தியோகபூர்வ கடன்வழங்குனர்களுடனான இறுதிக்கட்ட இணக்கப்பாட்டை எட்டுவதுடன், வெளியக தனியார் கடன்வழங்குனர்களுடனும் உரிய நிபந்தனைகளுக்கு அமைவாக இணக்கப்பாடொன்றுக்கு வரவேண்டும். இது இலங்கையின் கடன் ஸ்திரநிலையை நடுத்தர காலத்துக்கு அப்பால் உறுதிசெய்வதற்கு உதவும்.

அத்தோடு நாம் நுவரெலியாவில் உள்ள பெருந்தோட்டத்தொழிலாளர்களை சந்தித்து, தற்போதைய சூழ்நிலையில் இலங்கையின் நலிவுற்ற சமூகப்பிரிவினர் முகங்கொடுத்திருக்கும் சவால்கள் தொடர்பில் கேட்டறிந்தோம். குறிப்பாக அஸ்வெசும உள்ளடங்கலாக சமூகப்பாதுகாப்பு செயற்திட்டங்கள் வறிய மற்றும் நலிவுற்ற சமூகப்பிரிவினரைப் பாதுகாப்பதற்கு மிக அவசியமானவையாகக் காணப்படுகின்றன.

உத்தியோகபூர்வ கடன்வழங்குனர்களுடன் கடன்மறுசீரமைப்பு தொடர்பான இணக்கப்பாட்டை எட்டுவதில் தாமதம் நிலவுவதாகக் கூறமுடியாது. ஏனெனில் ஏற்கனவே உத்தியோகபூர்வ கடன்வழங்குனர் குழு மற்றும் சீன ஏற்றுமதி – இறக்குமதி வங்கியுடன் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. அது இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தமாகவோ அல்லது உடன்படிக்கையாகவோ மாற்றப்படவேண்டியது அவசியமாகும். இருப்பினும் அதற்கு சில காலம் தேவைப்படும்.