மத்திய வங்கியின் சுயாதீன அதிகாரம் : சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற்றுக்கொண்டுள்ளோம்

13 0

புதிய மத்திய வங்கி சட்டத்தின் பிரகாரம் மத்திய வங்கியின் சுயாதீனம் தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரி முழுமையான அறிக்கை பெற்றுக்கொண்டுள்ளோம் என அரசாங்க நிதி தொடர்பான குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21)  இடம்பெற்ற அமர்வின்போது ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்த எதிரணியின் சுயாதீன உறுப்பினர் சரித ஹேரத், 2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க புதிய மத்திய வங்கியின் சட்டத்துக்கு அமைய மத்திய வங்கிக்கு சுயாதீனம் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க நிதி தொடர்பான குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. மத்திய வங்கியின் சம்பள அதிகரிப்பை தொடர்ந்து மத்திய வங்கியின் சுயாதீன அதிகாரம்  பிரச்சினைக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் சுயாதீனம் மற்றும் அதிகாரம் தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் உட்பட அதிகாரிகள் குறிப்பிடும் கருத்துக்கள் முரண்பட்டதாக காணப்படுகிறது.

நாட்டின் நிதி அதிகாரம் பாராளுமன்றத்துக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது. புதிய மத்திய வங்கி சட்டத்தின் 05(1) உறுப்புரையின் பிரகாரம், மத்திய வங்கிக்கு பாராளுமன்றத்தால் சுயாதீனம் வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய வங்கி குறிப்பிடுவது பிரச்சினைக்குரியதாக உள்ளது.

மத்திய வங்கி நிறைவேற்றுத்துறையில் இருந்து விடுபட்டு செயற்பட வேண்டும் என்பதற்காக சுயாதீன அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதே தவிர பாராளுமன்றத்துக்கு பொறுப்புக்கூறலாகாது என்று எவ்விடத்திலும் குறிப்பிடப்படவில்லை.

ஆகவே மத்திய வங்கியின் புதிய அதிகாரம் மற்றும் சுயாதீனத்தன்மை தொடர்பில் சட்டமா அதிபரிடம் அரசாங்க நிதி பற்றிய குழு ஆலோசனை பெற வேண்டும் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய சபை முதல்வரும், கல்வி அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த, மத்திய வங்கி அரசியல் தலையீடுகள் இல்லாமல் சுயாதீனமாக செயற்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். மத்திய வங்கியில் அரசியல் தலையீடுகள்  தீவிரமடைந்ததால் எல்லையற்ற வகையில் நாணயம் அச்சிடப்பட்டது, பணவீக்கம் உயர்வடைந்தது, நாடு வங்குரோத்து நிலையடைந்தது.

இவ்வாறான பின்னணியின்தான் ஆளும் மற்றும் எதிரணியின் ஆதரவுடன் புதிய மத்திய வங்கி சட்டம் இயற்றப்பட்டு, மத்திய வங்கிக்கு சுயாதீனம் வழங்கப்பட்டது. நாட்டின் நிதி கொள்கைகளை ஸ்திரப்படுத்தவே சுயாதீனம் வழங்கினோமே தவிர சம்பளத்தை அதிகரித்துக்கொள்வதற்காக அல்ல என்பதை குறிப்பிட்டுக்கொள்கிறோம்.

மத்திய வங்கி சம்பள அதிகரிப்பு விவகாரம் தொடர்பில் அரசாங்க நிதி தொடர்பான குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, பேராசிரியர் சரித ஹேரத் குறிப்பிட்ட விடயங்களை அவரிடம் கேட்டு தெளிவுபடுத்திக்கொண்டேன். மத்திய வங்கியின் சுயாதீனத்தன்மை தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரி, அறிக்கை பெற்றுக்கொண்டுள்ளேன். அந்த அறிக்கையை நேற்று சபைக்கு சமர்ப்பித்த அறிக்கையில் உள்ளடக்கவில்லை என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய சரித ஹேரத், மத்திய வங்கியின் சுயாதீனம் தொடர்பில் சட்டமா அதிபரிடம் பெற்றுக்கொண்ட ஆலோசனைகளை சபைக்கு வெளிப்படுத்துங்கள். அது தொடர்பான அறிக்கையை சபைக்கு சமர்ப்பியுங்கள். ஏனெனில், அந்த அறிக்கையை கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.

அறிக்கையை சபைக்கு சமர்ப்பிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ சபைக்கு அறிவித்தார்.