சபாநாயகர் இந்த நாட்டின் சாபக்கேடு

23 0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சர்வாதிகார ஆட்சியை முன் கொண்டு செல்ல,பொலிஸார் மக்கள் மீது காட்டாட்சியை நடத்த அவர்களுக்கு கடுமையான சட்டங்கள் தேவைப்படுகின்றன.

இவ்வாறு சட்டங்களை  சட்டத்துக்கு முரணாக நிறைவேற்றிக்கொடுக்கும் சபாநாயகர் இந்த நாட்டின்   சாபக்கேடு. இந்த வெட்கம் கெட்ட  செயற்பாட்டுக்காக அவர் சபாநாயகர் பதவியிலிருந்து  மட்டுமல்ல பாராளுமன்ற உறுப்பினர் பதவியை  இராஜிநாமா செய்ய வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) இடம்பெற்ற சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்  தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வடமராட்சி கிழக்கில் இடம்பெற்ற நிகழ்வொன்றுக்காக சென்றிருந்த போது பொலிஸார் அவரை கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அது தொடர்பில் ஏற்பட்ட தகராறில் பொலிஸாரின் குற்றங்களை மறைப்பதற்காக பொலிஸுக்கு பொறுப்பான அமைச்சர் டிரான் அலஸ் , பொலிஸ் திணைக்களம் கூட்டிணைந்து எமது தலைவர்  குற்றமிழைத்தது போன்று பொய்க்குற்றச்சாட்டை சுமத்தி அவர் கொழும்பில் உள்ள தனது இல்லத்திலிருந்து பாராளுமன்றம் வரத் தயாராகிக் கொண்டிருந்தபோது அவரை கைது செய்ய பொலிஸாரை  கிளிநொச்சியிலிருந்து அனுப்பியிருந்தனர்.

இவ்வாறான நிலையில் சபாநாயகருடன் தொடர்பு கொண்டு பாராளுமன்றம் வந்து என்னுடைய கருத்துக்களை பதிவு செய்த பின்னர் என்னை விசாரணைக்கு அழைத்து  செல்ல நீங்கள் பொலிஸாருக்கு அறிவுறுத்த வேண்டும் என எமது தலைவர் வலியுறுத்தினார்.

ஆனால் சபாநாயகர் என்ற தனது அந்தஸ்தை மறந்து தனது பொறுப்பை மறந்து நிறைவேற்று அதிகார தரப்பின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான  ஒரு எடு பிடியாக , ஒரு அடிமையாக சபாநாயகர் செயற்பட்டிருந்தார்.

இதனால் நீதிக்கு புறம்பான முறையில் எமது தலைவர் கைது செய்யப்பட்டு அவரது சிறப்புரிமை மீறப்பட்டது. இதற்க்கான நீதி இன்னும் எமது தலைவருக்கு கிடைக்கவில்லை.

இவ்வாறு பல சம்பவங்கள் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்றபோது ஆளும் கட்சியும் கவலைப்படவில்லை. எதிர்க்கட்சியும் கவலைப்படவில்லை.

தமிழர்கள் என்று வருகின்றபோது இந்த சபையில் இருக்கக்கூடிய ஆளும் தரப்பினரும் எதிர்த்தரப்பினரும் இணைந்தே  செயற்பட்டுள்ளனர்.

சபாநாயகருக்கு பதவி  தேவை அதற்காக நிறைவேற்று அதிகாரத்தில் இருப்பவர்களின் கால்களைப் பிடித்துக் கொண்டு இருக்க வேண்டிய தேவை  அவருக்கு ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி, ராஜபக்சவுடன் உள்ள கொள்ளைக்கும்பலை பாதுகாக்கும் பணியை செய்வதனால் அந்த பணியை செய்யும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு  வேண்டப்படுகின்ற அனைத்து செயற்பாடுகளையும் செய்து கொடுக்க வேண்டிய கடப்பாடு உள்ளவராக சபாநாயகர் மாறியுள்ளார்.

அதன் காரணமாக அவர் ஜனாதிபதிக்கு வேண்டியவாறு நாட்டின் சட்டங்களை வளைத்துப்போடுகின்ற அனைத்து சமூக விரோத, ஜனநாயக விரோத அனைத்து நடவடிக்கைகளுக்கும் சபாநாயகர் ஆதரவாக  இருந்து சபையை  தவறாக வழிநடத்துகின்றார். அவர் பதவி வெறி பிடித்தவராக செயற்பட்டார்.

கடந்த காலங்களில் இவ்வாறு தமிழர்களுக்கு எதிராக முடிவுகளை எடுக்கிற பொது இங்குள்ள எல்லோருக்கும் அது மகிழ்ச்சியாக  இருந்தது.

பாராளுமன்றம் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறை சட்டங்களை இயற்றுகின்றபோது இங்குள்ள பேரினவாதிகளும் சிங்கள மக்களும் அவற்றுக்கு  ஆதரவு தெரிவித்து கரகோஷம் எழுப்பினார்கள்.

இன்று இந்த நாட்டிலுள்ள 2 கோடி மக்களினதும் கருத்து தெரிவிக்கும்  சுதந்திரத்தை நசுக்கும் நிகழ்நிலை காப்பு சட்டத்த்தை உயர் நீதிமன்றத்தின் விதப்புரைகளையும் மீறி சட்ட விரோதமாக நிறைவேற்ற துணிந்த இந்த சபாநாயகர் இந்த சபையின் காவலரா? என்பதை மக்கள் பிரதிநிதிகள் தீர்மானிக்க வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சர்வாதிகார ஆட்சியை முன் கொண்டு செல்ல பொலிஸார் மக்கள் மீது காட்டாட்சியை நடத்த அவர்களுக்கு கடுமையான சட்டங்கள் தேவைப்படுகின்றன.

இவற்றை  சட்டத்துக்கு முரணாக நிறைவேற்றிக்கொடுக்கும் சபாநாயகர் இந்த நாட்டின் ஒரு சாபக்கேடு. தனது வெட்கம் கெட்ட  வேலைக்காக அவர் சபாநாயகர் பதவியிலிருந்து  மட்டுமல்ல  பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் இராஜிநாமா வேண்டும் என்றார்.