சிவில் பாதுகாப்புப் படையினரை தாக்கிய யானைகள்

25 0

சிலாபத்தின் பங்கதெனிய ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள வனப்பகுதியில் வனவிலங்கு அதிகாரிகளுடன் இணைந்து காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் மீது காட்டு யானைகள் தாக்குதல் நடத்தியதாக புத்தளம் வனஜீவராசிகள் உதவி பணிப்பாளர் எரந்த கமகே தெரிவித்தார்.

பங்கதெனிய ரயில்  நிலையத்துக்கு  அருகில் உள்ள மல்வத்தை வனப்பகுதியில் இரண்டு யானைகள் புகுந்துள்ளதாக பங்கதெனிய கிராம மக்கள் புத்தளம் வனஜீவராசிகள் உதவி பணிப்பாளருக்கு அறிவித்ததையடுத்து வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று யானைகளை விரட்டியடித்தனர்.

இதனையடுத்து பங்கதெனிய ரயில் நிலையத்துக்கு அருகில் காணப்பட்ட இந்த இரண்டு காட்டு யானைகளும்  புத்தளம் நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலைக்  கண்டு  மிரண்டு அங்கிருந்து வெளியேறியுள்ளன.

அதனையடுத்து, இந்த இரண்டு யானைகளும் கிராமத்துக்குள் அத்துமீறி நுழையத் தயாரான நிலையில், அவை    ஊருக்குள் புகுந்து விடாமல் தடுக்க, வனஜீவராசிகள் அதிகாரிகளுடன் சிவில் பாதுகாப்பு வீரர்களும் கடுமையாகப் போராடிய நிலையிலேயே    இரு சிவில் பாதுகாப்பு வீரர்களையும் தாக்கியுள்ளன.

காயமடைந்த இரு சிவில் பாதுகாப்புப் படை வீரர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.