டெல்லியில் 26-வது நாளாக போராட்டம்: 23 விவசாயிகள் சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கினார்கள்

303 0

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நேற்று 26-வது நாளாக நீடித்தது. 23 பேர் சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கினார்கள்.

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நேற்று 26-வது நாளாக நீடித்தது. 23 பேர் சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கினார்கள்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, விவசாய கடன்களை தள்ளுபடி செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த மாதம் 14-ந்தேதி தொடங்கிய அவர்களுடைய போராட்டம் நேற்று 26-வது நாளாக நீடித்தது.

மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக விவசாயிகள் அரை நிர்வாணத்துடன் தினமும் நூதனமான முறையில் போராட்டம் நடத்துகிறார்கள். நேற்று முன்தினம் உள்ளங்கையில் பிளேடால் கீறி ரத்த அர்ப்பண போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் நேற்று, மீண்டும் மொட்டையடிக்கும் போராட்டம் நடந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பாதி மீசை, பாதி மொட்டையடித்தவர்கள் நேற்று முழு மொட்டை அடித்துக் கொண்டனர். போராட்டக்குழு தலைவர் அய்யாக்கண்ணு மீசையை மட்டும் சவரம் செய்து கொண்டார்.

விவசாயிகள் நேற்று முன்தினம் போலீஸ் பிடியில் இருந்தபோது, பிரதமரை பார்க்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறப்பட்டது. அதன்படி நேற்று, பிரதமரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்து விவசாயிகள் காத்து இருந்தனர். ஆனால் வாய்ப்பு கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தனர்.

இதற்கிடையே விவசாயிகளில் 23 பேர் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்து, நேற்று உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்கள்.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவதால் விவசாயிகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. அவர்கள், போராட்டம் நடத்தி வரும் ஜந்தர் மந்தர் ரோட்டில் 2 பொது கழிப்பிடங்கள் உள்ளன. இதில், போராட்டம் நடைபெறும் இடத்துக்கு அருகில் உள்ள பொது கழிப்பிடத்தையே பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பெரும்பாலான நேரம் ரோட்டிலேயே படுத்துக்கிடக்கிறார்கள். இரவில் கொசுக்கடியால் அவதிப்படுகிறார்கள்.

இதனால் கடந்த சில நாட்களாக விவசாயிகள் சிலர் வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். உடல்நிலை பாதிக்கப்பட்ட 4 பேர் நேற்று அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சிகிச்சைக்கு பின் குணம் அடைந்த தஞ்சாவூரைச் சேர்ந்த முருகன் (வயது 56), மேட்டுப்பாளையம் பிள்ளையார் பாளையத்தைச் சேர்ந்த அகிலன் (19) ஆகிய இருவரும் மீண்டும் போராட்ட களத்துக்கு திரும்பினர்.

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெருமாள் (55), துவரங்குறிச்சியைச் சேர்ந்த பழனிசாமி (65) ஆகியோர் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் பெருமாள், நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உடல் நலக்குறைவு ஏற்பட்ட போதிலும் போராட்டத்தை மேலும் வலுப்படுத்தவே விவசாயிகள் விரும்புகிறார்கள்.அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து போராட்ட குழு தலைவர் அய்யாக்கண்ணு கூறுகையில், “பிரதரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக போலீசார் கூறினர். ஆனால் இதுவரை அதற்கான வாய்ப்பு ஏற்படவில்லை. நாளை (இன்று) விடுமுறை நாள் என்பதால் திங்கட்கிழமை நாங்களே பிரதமரை பார்க்க கிளம்பி விடுவோம்” என்று தெரிவித்தார்.