வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய இருவர் அனுப்பப்பட்டுள்ளனர்

29 0

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய்வதற்கு ஏற்கனவே 2 அதிகாரிகள் வவுனியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும், இவ்விவகாரம் தொடர்பில் வவுனியா பிராந்திய அலுவலக ஒருங்கிணைப்பாளரின் அறிக்கை நாளை மறுதினம் கிடைக்கப்பெறும் எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வவுனியா மாவட்டத்தின் வெடுக்குநாறிமலையில் உள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கடந்த 8 ஆம் திகதி சிவராத்திரி தினத்தன்று பூஜை வழிபாடுகளில் ஈடுபடச்சென்ற பக்தர்களுக்கு பொலிஸாரால் இடையூறு விளைவிக்கப்பட்டதுடன், இரவு வேளையில் அங்கு வழிபாடுகளைத் தொடர முற்பட்டோர் அங்கிருந்து வலுகட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். அதுமாத்திரமன்றி ஆலயப்பூசகர் உள்ளடங்கலாக எண்மர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். அவர்களில் ஐவர் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவர்களை விடுவிப்பதற்குரிய சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படுமென அளிக்கப்பட்ட உத்தரவாதத்தை அடுத்து அப்போராட்டம் கைவிடப்பட்டது.

இருப்பினும் இக்கைது சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய அலுவலகத்திலும், அதனைத்தொடர்ந்து கொழும்பிலுள்ள தலைமை அலுவலகத்திலும் முறைப்பாடளித்த போதிலும், ஆணைக்குழு அதிகாரிகள் எவரும் கைதுசெய்யப்பட்டவர்களை வந்து பார்வையிடவில்லை என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் இதுபற்றி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்களின் ஒருவரான பேராசிரியர் ரி.தனராஜிடம் விளக்கம் கோரியிருந்தோம். அதன்படி நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஆணைக்குழுவின் கூட்டத்தில் இவ்விவகாரம் குறித்துக் கலந்துரையாடிய அவர், ஆணைக்குழுவின் தவிசாளர் இதுகுறித்த விசாரணைகளுக்காக 2 அதிகாரிகளை ஏற்கனவே வவுனியாவுக்கு அனுப்பிவைத்திருப்பதாகவும், அவ்வதிகாரிகளின் அறிக்கை வெகுவிரைவில் தமக்குக் கிடைக்கப்பெறும் எனவும் தெரிவித்தார்.

அதுமாத்திரமன்றி ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய அலுவலகத்தின் ஒருங்கிணைப்பாளர் ரோஹித பிரியதர்ஷனவுடன் தனிப்பட்ட முறையில் தொடர்புகொண்டு பேசியதாகவும், இவ்விவகாரம் தொடர்பான அறிக்கையை அவர் (ரோஹித பிரியதர்ஷன) நாளை மறுதினம் (21) கையளிப்பதாகக் கூறியிருப்பதாகவும் பேராசிரியர் தனராஜ் கேசரியிடம் தெரிவித்தார்.