வைத்திய பரிசோதனை நிலையமொன்றில் பணியாற்றிய மனைவியை கத்தரிக்கோலால் தாக்கி காயப்படுத்திய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நுவரெலியா, மஸ்கெலியா பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய பெண்ணொருவரே இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை (15) இந்த பெண் வத்தளை பிரதேசத்தில் உள்ள வைத்திய பரிசோதனை நிலையமொன்றில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, அங்கு சென்ற கணவர் தன் மனைவியோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இருவருக்கும் இடையேயான தகராறு எல்லை மீறியதில் சந்தேக நபரான கணவர் அருகில் இருந்த கத்தரிக்கோலால் மனைவியின் கழுத்தில் பலமாக தாக்கியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
காயமடைந்த பெண் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, கணவர் வத்தளை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ள நிலையில் பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

