சுதந்திரக் கட்சியை விட்டுச் செல்லாமல் புதிய கூட்டணியில் எனது அரசியல் பயணம் தொடரும்

13 0

எனது புதிய அரசியல் பயணத்தை மனித நேயக் கூட்டணியுடன் ஆரம்பிக்கவுள்ளேன். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து பலரும் இக்கூட்டணியில் இணையவுள்ளனர். அத்தோடு சு.க. தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இக்கூட்டணியில் இணைந்து பயணிக்க அழைப்பு விடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

எவ்வாறிருப்பினும் தான் ஒருபோதும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை விட்டுச் செல்லப் போவதில்லை என்றும் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

‘மனித நேயக் கூட்டணி’ தொடர்பில் வினவிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசியலில் நாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் கூட்டணிகள் அமைக்கப்படும். குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் அந்த கூட்டணிகள் பிளவடையும். அந்த வகையில் புதியதொரு பயணமாகவே ‘மனித நேயக் கூட்டணி’ ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாடு எதிர்கொண்டுள்ள இருண்ட, இக்கட்டான அரசியல் நிலைமைக்கு தீர்வு காணும் நோக்கிலேயே இக்கூட்டணி உதயமாகியுள்ளது.

மக்களுக்கு தற்போது புதிய கட்சி, புதிய தலைமைத்துவமே தேவைப்படுகிறது. புதிய தலைமைத்துவத்தின் மீது மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளதோடு, அவ்வாறு ஒருவர் வருவார் என்ற நம்பிக்கையும் அவர்களிடம் காணப்படுகிறது. ஆனால் எவ்வாறிருப்பினும் நான் நீல நிறத்தையோ, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியையோ விட்டுச் செல்ல மாட்டேன்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் அங்கத்துவம் வகித்துக் கொண்டு, கூட்டணியொன்றை அமைப்பது எந்த வகையிலும் அந்த கட்சிக்கு பாதிப்பாக அமையாது. புதிய கூட்டணியை தோற்றுவிப்பதன் மூலம், நான் சு.க.வை விட்டுச் செல்கின்றேன் என்று அர்த்தமல்ல.

சு.க.வின் தற்போதைய பொதுச் செயலாளருக்கும் இந்நிகழ்விற்கு அழைப்பு விடுத்திருக்கின்றேன். அதிலிருந்து பலர் எம்முடன் இணைவார்கள். சு.க. தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீண்ட காலமாக கூட்டணியொன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். அந்த வகையில் அவருக்கும் அழைப்பு விடுத்திருக்கின்றேன்.

இந்த கூட்டணியுடன் இணைந்து முன்னோக்கிச் செல்வோம் என்று அவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன். 18 சிறிய கட்சிகளும், முன்னாள் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் எம்முடன் இணையவுள்ளனர். அவர்கள் யார்? எமது கூட்டணி எவ்வாறு இருக்கும் என்பதை எதிர்வரும் புதன்கிழமை 2.30 மணிக்கு முழு நாடும் அறிந்து கொள்ளும் என்றார்.