வெடுக்குநாறிமலை விவகாரம் பற்றிய விசேட குழுவில் பௌத்த பிக்குகளும் உள்வாங்கப்பட்டால் என்ன நேரும் ?

15 0

வெடுக்குநாறிமலை விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்படவிருக்கும் விசேட குழு தொடர்பில் எதனையும் கூறமுடியாது. அக்குழுவில் பௌத்த பிக்குகளும் உள்வாங்கப்பட்டால் என்ன நடக்கும்? நாட்டின் வரலாறு மற்றும் தொல்பொருள் சான்றுகள் தொடர்பில் பலருக்கு போதிய விளக்கமின்மையால் தான் இத்தகைய பிரச்சினைகள் தோற்றம்பெற்றுள்ளன. எனவே வெடுக்குநாறிமலை விவகாரம் பற்றிய குழுவில் வரலாற்றை நன்கறிந்த தமிழ் பேராசிரியர்கள் உள்வாங்கப்படவேண்டியது அவசியமென தமிழ்மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் வெடுக்குநாறிமலையில் உள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சிவராத்திரி தினத்தன்று பூஜை வழிபாடுகளில் ஈடுபடச்சென்ற பக்தர்களுக்கு பொலிஸாரால் இடையூறு விளைவிக்கப்பட்டதுடன், இரவு வேளையில் அங்கு வழிபாடுகளைத் தொடர முற்பட்டோர் அங்கிருந்து வலுகட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். அதுமாத்திரமன்றி ஆலயப்பூசகர் உள்ளடங்கலாக எண்மர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.

அதற்கு எதிராகக் கடந்த திங்கட்கிழமை சிவில் சமூகப்பிரதிநிதிகளால் மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்புப்போராட்டத்தின்போது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற அமர்வைப் புறக்கணிக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அதேபோன்று விசேட குழுவொன்றை அமைத்து இவ்விடயம் தொடர்பில் விசாரணை நடத்தவேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில் இவ்விரு விடயங்கள் தொடர்பில் ஆராயும் நோக்கில் இன்றைய தினம் (16) மு.ப 11.00 மணியளவில் யாழ்ப்பாணம், நல்லூரில் அமைந்திருக்கும் தனது இல்லத்தில் நடைபெறவுள்ள சந்திப்பில் பங்கேற்குமாறு தமிழ்மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் ஏனைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளார்.

அதன்படி பாராளுமன்ற அமர்வைப் புறக்கணிப்பதற்கான சாத்தியப்பாடு குறித்து எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த விக்கினேஸ்வரன், தனது இல்லத்தில் இன்றைய தினம் நடைபெறவுள்ள சந்திப்பில் பங்கேற்குமாறு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்திருப்பதாகவும், அதில் யார் பங்கேற்பார்கள் என்பது பற்றி இன்னமும் உறுதியாகத் தெரியாத நிலையில் பாராளுமன்றப் புறக்கணிப்பு குறித்து விரிவாகக் கலந்துரையாடியதன் பின்னரே இறுதித் தீர்மானமொன்றுக்கு வரமுடியும் எனத் தெரிவித்தார்.

‘பாராளுமன்ற அமர்வைப் புறக்கணிப்பதனால் ஏதேனும் நன்மைகள் கிட்டுமா? அல்லது இவ்விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியை நேரடியாக சந்தித்துப் பேசவேண்டுமா? இவற்றில் எதனூடாக எமக்கான தீர்வைப் பெற்றுக்கொள்ளமுடியும்? என்பது பற்றி ஏனைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் கலந்துரையாடவேண்டும். பாராளுமன்ற பகிஷ்கரிப்பின் ஊடாக எமது மனநிலையை வெளிப்படுத்தமுடியுமே தவிர, அதன்மூலம் நிலையான தீர்வைப் பெற்றுக்கொள்ளமுடியுமா என்ற கேள்வி உள்ளது’ எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் வெடுக்குநாறிமலை விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி இணங்கியிருக்கும் நிலையில், அதன் நம்பகத்தன்மை குறித்து வினவியபோது அதற்கு விக்கினேஸ்வரன் பின்வருமாறு பதிலளித்தார்:

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமிக்கவிருக்கும் விசேட குழு தொடர்பில் எதனையும் கூறமுடியாது. அக்குழுவில் பௌத்த பிக்குகளும் உள்வாங்கப்பட்டால் என்ன நடக்கும்? நாட்டின் வரலாறு மற்றும் தொல்பொருள் சான்றுகள் தொடர்பில் போதிய விளக்கமின்மையால் தான் இத்தகைய பிரச்சினைகள் தோற்றம்பெற்றுள்ளன. எனவே வெடுக்குநாறிமலை விவகாரம் பற்றிய குழுவில் வரலாற்றை நன்கறிந்த தமிழ் பேராசிரியர்களும் உள்வாங்கப்படவேண்டும். ஆகையினால்தான் நாளைய தினம் (இன்று) எனது இல்லத்தில் நடைபெறவிருக்கும் சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு வரலாறு மற்றும் தொல்லியல் துறை பேராசிரியர்களான எஸ்.பத்மநாதன் மற்றும் பி.புஷ்பரட்ணம் ஆகியோருக்கும் அழைப்புவிடுத்திருக்கின்றேன். எனவே இவ்விவகாரங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடித் தீர்மானமொன்றை எட்டுவதே பொருத்தமானதாக இருக்கும் என்று தெரிவித்தார்.