இந்திய அரசாங்கத்தின் 250 மில்லியன் ரூபா நிதியுதவியில் கதுருவலையில் மும்மொழி தேசிய பாடசாலை

107 0

முன்னாள் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் இந்தியாவுக்கு மேற்கொண்ட முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இந்திய அரசாங்கத்தின் நன்கொடையாக 2017ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கதுருவலை மும்மொழி  தேசிய பாடசாலையின் நிர்மாணப் பணிகள் சில காரணிகளால் இடைநிறுத்தப்பட்டன.

குறிப்பாக  இப்பாடசாலையின் பணிகளை முடிக்க நிதி ஒதுக்கீடு செய்யுமாறு ஏற்கனவே உள்ள அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் சாதகமான பதில் கிடைக்கவில்லை.  இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் விடுத்த விசேட கோரிக்கைக்கு அமைய, மும்மொழி தேசிய பாடசாலையை நிறைவு செய்வதற்கு நிதி ஒதுக்குவதற்கு விருப்பம் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, இப்பாடசாலையின் தற்போதைய நிலையினை அறிந்து கொள்வதற்காக  இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் வேலைத்திட்டங்களுக்கான ஆலோசகர்  எல்டோஸ் மெத்யூ புன்னூஸ் மற்றும் அரச அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (15) கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டனர்.

இதன்படி எதிர்வரும் 06 மாதங்களுக்குள் இப்பாடசாலையின் பணிகளை நிறைவு செய்வதற்கு 250 மில்லியன் ரூபா இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.