பாடசாலை மாணவர்களை ஏற்ற மறுத்த அரச பஸ்ஸுக்கு முகமாலை பெற்றோர் ஒருவர் செய்த சிறப்பான செயல்

40 0

கிளிநொச்சி முகமாலை பகுதியில் பாடசாலை மாணவர்களை பஸ்களில் ஏற்றாது பயணிப்பது தொடர்பில் பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டு வந்தனர்.

குறித்த பிரச்சினை நீண்ட காலமாக காணப்படுகிறது. இதனால் பாடசாலைக்கு உரிய நேரத்துக்கு போக முடியாத நிலை காணப்படுவதாகவும், சில சமயங்களில் பாடசாலைக்கு செல்லாமல் விடும் சூழலும் காணப்படுவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

இன்று செவ்வாய்க்கிழமை 7.40 வரை எந்தவொரு பஸ்ஸும் மாணவர்களை ஏற்றாது பயணித்துள்ளது.

இதனை அடுத்து பெற்றோர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளை பஸ்ஸூக்கு குறுக்காக நிறுத்தி மாணவர்களை ஏற்றி அனுப்பி வைத்த சம்பவம் பதிவாகியுள்ளது.

குறித்த பிரச்சினையானது, எழுதுமட்டுவாள் தொடக்கம் இயக்கச்சி வரையான சுமார் 8 க்கு மேற்பட்ட பிரதேசங்களில் காணப்படுகிறது.

பாடசாலைகள் கற்றல் செயற்பாடுகள் 7.30க்கு  ஆரம்பிக்கும் நிலையில், இவ்வாறு மாணவர்கள் பிந்தி செல்லுதல் மற்றும், செல்லாதுவிடல் காரணமாக பல்வேறு பிரச்சினைகளிற்கு முகம் கொடுக்கின்றனர்.

மன உளைச்சலுக்கு மாணவர்கள் ஆளாவதுடன், கல்வியில் ஆர்வம் காட்டுதல் மற்றும் பூரண கல்வியை பெற முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

அத்துடன், பாடசாலை இடைவிலகலுக்கும் உந்துதலை கொடுக்கும் அபாயமும் காணப்படுகிறது.

மாணவர்களின் கல்வி மற்றும் இணை செயற்பாடுகளிற்கு ஊக்கமளிக்கும் வகையில், அந்த பிரதேச மாணவர்களின் போக்குவரத்தினை சீர் செய்து கொடுக்க வேண்டிய பொறுப்பு அனைத்து தரப்பினரிடமும் உள்ளது.

இவ்விடயம் தொடர்பில் வடமாகாண ஆளுநர் நேரடியாக தலையீடு செய்து, உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் வலியுறுத்துகின்றனர்.