வெடுக்குநாறிமலை விவகாரம் : பொலிஸாரின் மிலேச்சத்தனமான ஒடுக்குமுறையை வன்மையாக கண்டிக்கிறோம்

29 0

சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த பக்தர்கள் பொலிஸாரால் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டு, சிலர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டார்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் உள்ளிட்ட பலர் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

அதுமாத்திரமன்றி இவ்வாறானதொரு சூழ்நிலையில் புதிதாக ஸ்தாபிக்கப்படும் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்படும் என்று எவ்வாறு கூறமுடியும்? எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தின் வெடுக்குநாறி மலையில் உள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (08) சிவராத்திரி தினத்தன்று நீதிமன்ற அனுமதியுடன் பூஜை வழிபாடுகளில் ஈடுபடச் சென்ற பக்தர்களுக்கு பொலிஸாரால் இடையூறு விளைவிக்கப்பட்டதுடன், இரவு வேளையில் அங்கு வழிபாடுகளைத் தொடர முற்பட்டோர் அங்கிருந்து வலுகட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் தமது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

அதன்படி, பாதுகாப்புத் தரப்பினரின் மிலேச்சத்தனமான இந்நடவடிக்கையைக் கடுமையாக கண்டிப்பதாகத் தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், தொல்லியல் திணைக்களம், பௌத்த பிக்குகள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் உள்ளிட்ட சகலரும் ஒன்றிணைந்து தமிழ் மக்களின் வழிபாட்டுரிமைக்குத் தடை ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டினார்.

அதுமாத்திரமன்றி, தமிழர்களுக்குச் சொந்தமான வழிபாட்டிடங்களை பௌத்த தலமாக மாற்றுவதற்கான இனவாத செயற்பாடாகவே தாம் இதனைப் பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேபோன்று இதுபற்றிக் கருத்து வெளியிட்ட இலங்கை தமிழ் அரசு கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரன், வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் தமிழ் மக்கள் மிக நீண்ட காலமாக வழிபாடுகளில் ஈடுபட்டுவருவதாகவும், அவ்வாறிருக்கையில் தற்போது பாதுகாப்புத் தரப்பினர் இவ்வாறு செயற்படுவது கண்டிக்கத்தக்க விடயம் எனவும் தெரிவித்தார்.

அத்தோடு, தமிழ் மக்களை இலக்குவைத்து நிகழ்த்தப்படும் இத்தகைய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஜனாதிபதி வேட்பாளர்கள் என்று கூறுவோர் எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பதாகவும், இவற்றைப் பார்க்கும்போது ஆட்சியாளர்கள் தமிழர்களுக்கு எதிராக சிங்கள இனவாத வன்முறையைத் தூண்ட முயற்சிப்பது போல் தெரிவதாகவும் அவர் விசனம் வெளியிட்டார்.

அதேவேளை இவ்விவகாரத்தில் பாதுகாப்புத் தரப்பினர் ஜனாதிபதியின் கட்டளைகளை மாத்திரமன்றி, நீதிமன்ற உத்தரவுகளுக்கும் மதிப்பளிப்பதில்லை எனவும், மாறாக, வெடுக்குநாறிமலை, குருந்தூர்மலை, மயிலத்தமடு மேய்ச்சல் தரை போன்ற விவகாரங்களில் பௌத்த பிக்குகளின் உத்தரவுகளே பாதுகாப்புத் தரப்பினரால் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கவலை வெளியிட்டார். அதுமாத்திரமன்றி, இத்தகைய போக்கு மிகப் பாரதூரமான விளைவையே ஏற்படுத்தும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

மேலும், சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்ட பக்தர்கள் கைதுசெய்யப்பட்டமையை வன்மையாக கண்டித்துள்ள அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் புலம்பெயர் தமிழர் அமைப்பான தமிழ் அமெரிக்கர்கள் கூட்டிணைவு, இது மத உரிமைகளை மீறுவதாகும் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்தோடு, தமிழ் மக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு உடன் தலையீடு செய்யுமாறும் அவ்வமைப்பு அமெரிக்காவை வலியுறுத்தியுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் பின்வருமாறு கேள்வி எழுப்பியுள்ளார்:

‘இங்கு வழிபாட்டில் ஈடுபடும் மக்கள் எதற்காக பொலிஸாரால் வெளியேற்றப்படுகின்றார்கள்? எதற்காக கைதுசெய்யப்படுகின்றார்கள்? அவர்களது மத உரிமை எதற்காக மீறப்படுகின்றது? இவ்வாறானதொரு சூழ்நிலையில் புதிதாக ஸ்தாபிக்கப்படும் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்படும் என்று எவ்வாறு கூறமுடியும்?’ என வினவியுள்ளார்.