சுயலாப அரசயல் குழுக்களே மக்களை தூண்டி முறுகலை ஏற்படுத்துகின்றன

34 0

சுயலாப அரசியல் குழுக்களே மக்களை தூண்டி முறுகல் நிலைமைகளை உருவாக்குகின்றன என்று புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரம நாயக்க தெரிவித்தார்.

வெடுக்குநாறி மலையில் முன்னெடுக்கப்பட்ட சிவராத்திரி பூஜை வழிபாடுகளில் ஏற்படுத்தப்பட்ட இடையூறுகள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கைத் திருநாட்டின் நாகரீகம் சம்பந்தமாக பாதுகாக்கப்பட வேண்டிய பல விடயங்கள் உள்ளன. இதில் வடக்கு, கிழக்கு, தெற்கு என்ற பேதங்கள் இல்லை.

இலங்கையின் புராதன நாகரீகம் சம்பந்தமான வரலாறுகளை நாம் பாதுகாப்பதுடன், அவற்றை அடுத்த சந்ததிக்கு கடத்துவதே பிரதான இலக்காக உள்ளது.

இந்நிலையில், வடக்கு மாகாணத்தின் வவுனியா மாவட்டத்தில் வெடுக்குநாறி மலை உள்ளது. இந்த பிரதேசமானது வனப்பரிபாலன திணைக்களத்தின் நிருவாகத்தின் கீழ் உள்ளது. அத்தோடு வெடுக்குநாறி மலையானது தொல்பொருளியல் பகுதியாகவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு வனப்பரிபால திணைக்களம் மற்றும் தொல்பொருளியல் திணைக்களத்தின் நிருவாகத்தின் கீழ் உள்ள பகுதிகளில் தண்ணீர் பவுசர், உழவு இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை கொண்டுசெல்வது சட்டத்திற்கு முரணானதாகும்.

அதுமட்மன்றி அப்பகுதிகளில் பிரவேசிப்பதும் சட்டத்திற்கு முரணான நடவடிக்கையாகும். ஆகவே, உரிய அனுமதிகளைப் பெறாது அப்பகுதியில் பிரவேசிப்பதை தடுப்பதற்கு பொலிஸார் தமக்கு அதிகாரமளிக்கப்பட்ட வரையறைகளுக்கு அமைவாக நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்பது முக்கியமான விடயமாகின்றது.

எந்தவொரு விடயங்களையும் கருத்தில் கொள்ளாது பொதுமக்கள் தாம் விரும்பியவாறு செயற்படுவதாக இருந்தால் நாட்டில் எந்தவொரு சட்டங்களும், நீதிமன்றங்களும் இருக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.

வெடுக்குநாறி மலை விடயத்தில், அப்பாவி தமிழ் மக்களின் பின்னால் சில அரசியல் தரப்பினர் உள்ளனர். அவர்களே தமிழ் மக்களை துண்டிவிட்டு முரண்பாடுகளை ஏற்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்கின்றார்கள்.

தமிழ் மக்கள் அவ்விதமான தூண்டுதல்களுக்கு ஆளாவது போன்று பெரும்பான்மை சிங்கள மக்களும், பௌத்த மதகுருக்களும் அதற்கு பதிலளிப்பதற்கு தூண்டப்படுகின்றர்கள்.

ஆகவே, இரண்டு தரப்பிலும், தூண்டப்படுகின்ற தரப்பினர் குழப்பங்கள் ஏற்படுத்தி, முரண்பாடுகள் தோற்றுவிக்கப்படுவதற்கு வித்திடுகின்றனர். இதில் அரசியல் தரப்பினர் தமது சுயலாபங்களை தேடிக்கொள்கின்றனர்.

எனவே, இவ்விதமான நிகழ்வுகளை தொடர்ச்சியாக அனுமதிக்க முடியாது. ஆகவே தொல்பொருளியலைப் பாதுகாப்பது தொடர்பாக உரிய சட்ட நடைமுறை பின்பற்றப்படும்.

அதேபோன்று தொல்பொருளியல் பகுதிகளாக அடையாளம் காணப்படும் பகுதிகள் பௌத்தத்துக்குரியனவா இல்லையா என்பது முக்கியமான விடயமல்ல. அனைத்து தொல்பொருளியல் பகுதிகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். ஆகவே, இந்த விடயத்தில் இனக்குழுமங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்துவதால் வெறுமனே அரசியல் குழுவினரே இலாபமீட்டுகின்றனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.