இலங்கை – அமெரிக்க மக்கள் தொடர்பை வலுப்படுத்த இத்திட்டம் உதவும்

242 0

இலங்கையில் பின்தங்கிய பிரதேசங்களில் கற்பித்தல் உள்ளிட்ட சமூகப்பணிகளை முன்னெடுப்பதற்காக வருகைதந்துள்ள அமெரிக்க பீஸ் கோப்ஸ் தன்னார்வத் தொண்டர்கள், அடுத்த இருவருடகாலத்துக்கு தமது அர்ப்பணிப்புடன்கூடிய சேவையை உறுதிப்படுத்தி புதன்கிழமை (6) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

அமெரிக்காவின் பீஸ் கோப்ஸ் அமைப்பின் ஊடாக அடுத்துவரும் இருவருடகாலத்துக்கு தன்னார்வ அடிப்படையில் இலங்கையில் சேவையாற்றவுள்ள தொண்டர்களை அறிமுகப்படுத்துவதுடன், அவர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு புதன்கிழமை (6) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

‘பீஸ் கோப்ஸ்’ என்பது அமெரிக்க அரசாங்கத்தினால் அனுசரணையளிக்கப்படும் ஓர் நலனோம்பு அமைப்பாகும். இவ்வமைப்பின் ஊடாக தேர்ச்சியும், அர்ப்பணிப்புமுடைய அமெரிக்கத் தன்னார்வலர்கள் ஒன்றிணைக்கப்பட்டு, சமூகங்களுக்கு சேவையாற்றும் நோக்கில் சுமார் 60 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுவருகின்றனர்.  அவ்வாறு அனுப்பிவைக்கப்படும் தன்னார்வலர்கள் அவர்கள் செல்லும் நாடுகளைச்சேர்ந்த மக்களுடன் தங்கியிருந்து பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் கற்பித்தல், முன்னுரிமைக்குரிய செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தல், இடைத்தொடர்புகளை ஏற்படுத்தல், கலாசாரம் மற்றும் அறிவைப் பகிரல், எதிர்கால சந்ததியினர் நேர்மறையான விதத்தில் நிலைமாற்றமடைவதற்கு உதவுதல் உள்ளிட்ட சமூகப்பணிகளில் ஈடுபடுவர்.

அதன்படி இலங்கைக்கு முதன்முறையாக 1962 ஆம் ஆண்டு பீஸ் கோப்ஸ் தன்னார்வத் தொண்டர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர். அதன் நீட்சியாக அடுத்த இருவருடகாலத்துக்கு இலங்கையின் ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் பணியாற்றவுள்ள பீஸ் கோப்ஸ் தன்னார்வத் தொண்டர்கள் நிகழ்வில் அறிமுகம் செய்துவைக்கப்பட்டதுடன், அவர்கள் தமது அர்ப்பணிப்புடன்கூடிய சேவையை உறுதிப்படுத்தி சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பீஸ் கோப்ஸ் தன்னார்வத் தொண்டர் திட்டம் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படுவது குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன் இது பாடசாலை மாணவர்கள் உள்ளடங்கலாக இளைய தலைமுறையினர் மத்தியில் ஆங்கில அறிவை மேம்படுத்துவதற்கு உதவும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.

அத்தோடு மாணவர்கள் மத்தியில் சிங்களம், தமிழ் ஆகிய அரசகரும மொழிகளுக்கு மேலதிகமாக இணைப்பு மொழியான ஆங்கிலத்தில் புலமையை ஏற்படுத்துவதற்கு தாம் முன்னெடுத்துவரும் திட்டங்கள் தொடர்பில் பிரஸ்தாபித்த அவர், எதிர்வரும் வருடங்களில் மேலும் பல தன்னார்வலர்கள் நாட்டுக்கு வருகைதந்து மாணவர்களின் கல்வித்தர மேம்பாட்டுக்கு உதவவேண்டும் எனக் வேண்டுக்கொண்டார்.

அதேவேளை அங்கு கருத்து வெளியிட்ட இலங்கைக்கான அமெரிக்க உயர்ஸ்தானிகர் ஜுலி சங், இருநாடுகளுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவும் பல்துறைசார் ஒத்துழைப்பை நினைவுகூர்ந்ததுடன், இருப்பினும் இருநாட்டு மக்களுக்கு இடையிலான தொடர்பே அதன் உச்சமாக அமையும் எனவும், அத்தொடர்புக்கு இத்திட்டம் வழிவகுக்கும் எனவும் சுட்டிக்காட்டினார். அதுமாத்திரமன்றி அடுத்த இரு ஆண்டுகளுக்கு இலங்கையில் பணியாற்ற முன்வந்த அமெரிக்காவை சேர்ந்த தன்னார்வலர்களுக்கு நன்றி தெரிவித்த ஜுலி சங், இலங்கையின் வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் ஆங்கிலமொழி அறிவு பங்களிப்புச்செய்யும் எனக் குறிப்பிட்டார்.