இலங்கையின் கொழும்பில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்ற சர்வதேச கீதை பெருவிழா

135 0

நான்கு நாள் அமர்வுகளைக் கொண்ட சர்வதேச கீதை பெருவிழா 2024 மார்ச் 01ஆம் திகதி முதல் 2024 மார்ச் 04ஆம் திகதி வரை இலங்கையின் கொழும்பில் நடைபெற்றதுடன் இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் கௌரவ மகிந்த யாப்பா அபேவர்த்தன அவர்களுக்கு புனித பகவத் கீதை நூலின் பிரதி ஒன்று கையளிக்கப்பட்ட நிலையில் நிறைவடைந்துள்ளது.

இந்தியாவின் ஹரியானா மாநிலத்தின் குருஷேத்ரா மேம்பாட்டு வாரியம், இலங்கையின் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, மற்றும் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் கலாசாரப் பிரிவான சுவாமி விவேகானந்தா கலாசார நிலையம் ஆகியவை இணைந்து இலங்கையில் உள்ள 30க்கும் அதிகமான மத மற்றும் சமூக நிறுவனங்களின் ஒன்றிணைவுடன் இலங்கையில் முதல் தடவையாக குறித்த 5ஆவது சர்வதேச கீதை பெருவிழாவை ஒழுங்கமைத்திருந்தன.

இவ்விழாவின் அங்கமாக 2024 மார்ச் 03 அன்று ISKCON, இராமகிருஷ்ணா மிஷன், மயூராபதி ஸ்ரீ பத்ரகாளி கோயில் ஆகியவற்றின் தொண்டர்கள் உட்பட கிட்டத்தட்ட ஆயிரம் கலைஞர்கள் பல்வேறு ஆற்றுகைகளை நிகழ்த்தியவாறு தாமரைத் தடாகத்திலிருந்து கொழும்பு விகாரமகாதேவி பூங்கா வரை சென்ற ஒற்றுமைக்கான யாத்திரை உட்பட பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. இலங்கையின் பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன மற்றும் அமைச்சர்களான கௌரவ. பந்துல குணவர்தன மற்றும் கௌரவ. விதுர விக்கிரமநாயக்க, உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இந்தியாவிலிருந்து வருகைதந்த பேராளர்கள் இந்த யாத்திரையை பார்வையிட்டிருந்தனர்.

“சமாதானம், சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் உருவகமாக கீதை” என்ற தொனிப்பொருளில் பல்வேறு நிபுணர்களால் நடத்தப்பட்ட செயலமர்வுகளுடன் கீதை குறித்த சர்வதேச கலந்துரையாடல் இரண்டாம் நாள் நடைபெற்றது. கீதை குறித்த சர்வதேச கருத்தரங்கில் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ விதுர விக்கிரமநாயக்கா, உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, சுவாமி குருசரநந்தா ஜி மஹராஜ், கீதா மணிசி சுவாமி கயாநந்தா ஜி மஹராஜ், குருஷேத்ரா மேம்பாட்டு வாரிய செயலாளர் ஶ்ரீ விகாஸ் குப்தா மற்றும் பேராசிரியர் அசங்க திலகரட்னே ஆகியோர் உள்வாங்கப்பட்டிருந்தனர். கீதையின் மகிமையின் உலகளாவியதும் காலவரம்பற்றதுமான செய்தி இவ்விவாதங்களில் பொதுவான கருப்பொருளாக இருந்தது.

இலங்கையில் நடைபெற்ற சர்வதேச கீதை பெருவிழாவே சர்வதேச ரீதியாக நடைபெற்ற பாரிய சர்வதேச கீதை பெருவிழாவாகும். முன்னர் நடைபெற்ற 4 பதிப்புக்களும் அவுஸ்திரேலியா ( 2023), கனடா (2022) ஐக்கிய இராச்சியம் (2019) மற்றும் மொரீசியஸ் (2019) ஆகிய நாடுகளில் நடைபெற்றிருந்தன. மகாபாரதத்தில் கிருஸ்ண பரமாத்மாவால் அருச்சுனருக்கு பகவத் கீதை உபதேசிக்கப்பட்டதாக நம்பப்படும் குருஷேத்ராவில் 1989 ஆம் ஆண்டிலிருந்து கீதை பெருவிழா குருஷேத்ரா மேம்பாட்டு வாரியத்தால் ஒழுங்கமைக்கப்பட்டு வருகின்றது.