அலிசப்ரி ரஹீமின் பாராளுமன்ற சேவை ஒருமாத காலத்திற்கு இடைநிறுத்தம்

25 0

பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமின் பாராளுமன்ற சேவை இன்று புதன்கிழமை (06) முதல் ஒருமாத காலத்துக்கு இடை நிறுத்தப்பட்டுள்ளதாக சபாநாயக்கர் தெரிவித்துள்ளார்.

இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டு மற்றும் பாராளுமன்ற சிறப்புரிமையை துஷ்பிரயோகம் செய்து 7 கோடி ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வருவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகளில்  அவர் குற்றவாளியாக  காணப்பட்ட நிலையிலேயே நேற்று  ஒரு மாதத்திற்கான சேவைத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கான சிறப்புரிமை குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ்வினால் முன்வைக்கப்பட்ட விசாரணை அறிக்கைக்கு அமையவே அலி சப்ரி ரஹீமுக்கு ஒரு மாத கால பாராளுமன்ற சேவைத் தடை விதிக்கப்பட்டது.

தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளுடன் அவர் கடந்த வருடம் மே மாதம் 23ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார். அந்த வகையில் பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ்வினால் இந்த வருடத்தின் ஜனவரி 24ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்த அறிக்கையில் வழங்கப்பட்டிருந்த பரிந்துரைக்கு அமைய அவருக்கான ஒரு மாத கால சேவைத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் மேற்படி பிரேரணையை முன்வைத்த சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த,  சிறப்புரிமை குழுவின் அறிக்கையில் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைக்கு அமைவாக பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமின் பாராளுமன்ற சேவை இன்று 6ஆம் திகதி முதல் ஒரு மாத காலத்துக்கு இடைநிறுத்தப்பட வேண்டும் என இப்பாராளுமன்றம் தீர்மானிக்கிறது என்றார்.