வரி திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தை ஒத்திவைக்க வேண்டும்

21 0

சமூகப் பாதுகாப்பு உதவுத் தொகை வரி (திருத்தச்) சட்டமூலம் மற்றும் பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம்  தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் இருந்து  பரிந்துரை எதுவும் முன்வைக்கப்படாத நிலையில் எவ்வாறு இதனை பராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்வாங்க முடியும். அதனால் இந்த சட்டமூலத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளாமல் ஒத்திவைக்க வேண்டும்  என கேட்கிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (05) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சமூகப் பாதுகாப்பு உதவுத் தொகை வரி (திருத்தச்) சட்டமூலம் மற்றும் பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம்  தொடர்பில் சட்டமா அதிபரின் பரிந்தரை இன்று (நேற்று) கிடைக்கிறது. அப்படியானால் எவ்வாறு நாளைய (இன்றைய) பாராளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் உள்வாங்க முடியும்.  சட்டமா அதிபரின் பரிந்துரைக்கு பின்னரே இது ஒழுங்குப்பத்திரத்தில் உள்வாங்கப்பட வேண்டும்.. இந்த முரண்பாட்டை அமைச்சரவையிலோ அல்லது குழு கூட்டத்திலாே பிரதமர் இந்த விடயத்தை தெரிவித்திருக்கிறார்.

சமூக பாதுகாப்பு உதவுத் தொகை புரள்வை வைத்தே அறவீடு செய்யப்படுகிறது. இதற்குத் தேவையான சட்ட வழிகாட்டல்களை நடைமுறைப்படுத்துவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திடம் முறையான வேலைத்திட்டம் இல்லாததால், நுகர்வோர் மீது திணிக்கும் சூழ்நிலை நிலவுவதாலும்,வற்  வரி அதிகரிப்பு மற்றும் சமூக பாதுகாப்பு  உதவுத் தொகை திருத்தச் சட்டமூலங்கள் இரண்டையும் எதிர்க்கட்சி எதிர்க்கிறது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரை இன்றி இதனை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள முடியாது.

எனவே சமூகப் பாதுகாப்பு உதவுத் தொகை வரி (திருத்தச்) சட்டமூலம்  மற்றும் பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலத்தினை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளாமல் தற்காலிகமாக ஒத்திவைக்க வேண்டும் என்றார்.