வங்கிகளில் இருந்து கடன் பெற்ற சாதாரண மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்

14 0

அரசாங்கம் சர்வதேச நாடுகளிடமிருந்து பெற்ற கடனை செலுத்த முடியாது என தெரிவித்து அதற்கு மாற்று வழிகளை கோரும்போது சாதாரண வியாபாரிகள் வங்கிகளில் இருந்து பெற்ற கடனை எவ்வாறு செலுத்துவது?. அதனால் பராட்டே சட்டத்தின் கீழ் கடன் பெற்றவர்களுக்கு அரசாங்கம் சலுகைகளை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (5) இடம்பெற்ற பிணைப்பொறுப்பளிக்கப்பட்ட கொடுக்கல்வாங்கல்கள் சட்டமூலம், நம்பிக்கைப்பொறுப்பு பற்றுச்சீட்டுக்கள் (திருத்தச்) சட்டமூலம், ஈட்டுச்சட்டம் (திருத்தச்) சட்டமூலம், நிதி குத்தகைக்குவிடுதல் (திருத்தச்) சட்டமூலம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பராட்டே சட்டத்தின் கீழ் வங்கிகளில் கடன் பெற்று வியாபாரம் மேற்கொண்டுவந்த சிறிய மற்றும் நடுத்தர தொழிலாளர்கள் இன்று பாதிக்கப்பட்டுள்ளர். அவர்களின் வியாபாரம் நட்டமடைந்துள்ளதால், அவர்களால் வங்கிகளில் இருந்து பெற்றுக்கொண்ட கடனை மீள செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதனால் அவர்களின் சொத்துக்களை வங்கி உடமையாக்கி, ஏலத்தில் விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பல தொழிலானர்களின் குடும்பங்கள் வீதிக்கு  இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் பராடே சட்டத்தை தற்காலிகமாக இடை நிறுத்த அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டது. என்றாலும் தற்போதும் வங்கிகள் அந்த சட்டத்தின் பிரகாரம் செயற்பட்டுக்கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக அதிகமானவர்கள் தங்களின் தொழிலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதனால் எதிர்காலத்தில் அதிமான தொழிலில்லாத பிரச்சினை ஏற்படும் நிலை இருக்கிறது. இதனால் வறுமை அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது. அதனால் அரசாங்கம் இது தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் நாடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதால் அரசாங்கம் சர்வதேச நாடுகளிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன் தவணைகளை மீள செலுதத முடியாது என தெரிவித்து, கடன் மறுசீரமைப்புக்கு சென்றிருக்கிறது.

அரசாங்கத்துக்கு பெற்ற கடனை செலுத்த வழியில்லை என்றால், சாதாரண மக்கள் வங்கிகளில் இருந்து பெற்றுக்கொண்ட கடனை எவ்வாறு செல்ல முடியும்? அதனால் சாதாரண மக்களுக்கும் இந்த கடனை செலுத்துவதற்கு சலுகைகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பொருளாதார ரீதியில் மீண்டும் குழப்ப நிலை ஏற்படும்.

மேலும் பொருளாதார நெருக்கடி காரணமாக பெருந்தோட்ட மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். ஆயிரம் ரூபா சம்பளத்தில் அவர்களால் வாழ்க்கைச் செலவை கட்டுப்படுத்த முடியாது. அதனால் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 2ஆயிரம் ரூபாவாக ஆவது அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.